2013-11-25 15:58:48

வாரம் ஓர் அலசல் – இறைநம்பிக்கையில் தொடர்ந்து வாழ...


நவ.25,2013. RealAudioMP3 ஒரு சமயம் கம்போடியா நாட்டில் ஒரு சிறிய கிராமத்திலிருந்த ஆலயம் ஒன்றில் திருப்பலி தொடங்கவிருந்தது. அந்நேரத்தில், கறுப்பு உடையணிந்த ஒரு முரடர் கூட்டம் திமுதிமுவென உள்ளே நுழைந்தது. கையில் ஆயுதங்களுடன் நுழைந்த அந்தக் கும்பல் திருப்பலி நிறைவேற்றவிருந்த அருள்பணியாளரை முதலில் வெளியே இழுத்துச் சென்றது. பின்னர் அந்தக் கும்பல் தலைவன் பீடத்தின்முன்னால் போய் நின்று, உங்களில் யாரெல்லாம் கிறிஸ்தவர்களோ அவர்கள் அனைவரும் எழுந்து நில்லுங்கள் என்றான். உடனே அங்கிருந்தவர்களில் ஒருசிலர் எழுந்து நின்றனர். அவர்களையும் அந்தக் கும்பல் வெளியே இழுத்துச் சென்றது. அவர்கள் இழுத்துச் செல்லப்பட்ட பின்னர் ஆலயத்துக்கு வெளியே டமார்.. டமார்... என துப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்டது. உள்ளே இருந்தவர்கள் இந்தச் சப்தம் கேட்டு நடுங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அந்தக் கும்பல் தலைவன் மீண்டும் பீடத்தின்முன்னால் போய் நின்று, இன்னும் இங்கு கிறிஸ்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா எனக் கேட்டான். அங்கிருந்தவர்களில் யாருமே எழுந்து நிற்கவில்லை. கோபம்கொண்ட அத்தலைவன் அவர்களிடம், “நம்புகிற உண்மைக்காக” எழுந்து நிற்பதற்குத் துணிச்சல் இல்லாத யாருக்கும் இந்த ஆலயத்தில் இடமில்லை, வெளியேறுங்கள் எனக் கத்திவிட்டுச் சென்றுவிட்டான். சிறிதுநேரம் கழித்து, ஆலயத்துக்குள் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது, அந்தக் கும்பல் வெளியே அழைத்துவந்த அருள்பணியாளரும், மற்றவர்களும் சிரித்துக்கொண்டு நின்றுகொண்டிருப்பதைப் பார்த்து வியப்படைந்தனர். அன்பு நெஞ்சங்களே, இஞ்ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்பிக்கை ஆண்டை, விசுவாச ஆண்டை நிறைவு செய்தார். இந்நம்பிக்கை ஆண்டு, தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிய இந்தக் கம்போடியக் கிறிஸ்தவர்கள் போன்று, “நம்புகிற உண்மைக்காகத்” துணிச்சலுடன் செயல்பட அழைக்கிறது. கிறிஸ்தவர் என்று எதிரிகள் முன்னிலையில் துணிச்சலுடன் சொல்லி தங்கள் உயிரையே தியாகம் செய்தவர்கள் தொடக்ககாலம் முதல் இன்றும் இருந்து வருகிறார்கள். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அண்மையில் கூறியதுபோன்று, தொடக்ககாலத்தில் கிறிஸ்துவ விசுவாசத்துக்காகக் கொல்லப்பட்டவர்களைவிட இக்காலத்தில் அதிகம்பேர் கொலைசெய்யப்படுகின்றனர். மத்திய கிழக்கு நாடுகளில், சிரியாவில், சீனாவில், பாகிஸ்தானில், இந்தியாவில்... என கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படும் நாடுகளின் பட்டியல் நீள்கிறது. பாகிஸ்தானில் Jameelabadஐச் சேர்ந்த Saba Waris என்ற 13 வயது கிறிஸ்தவச் சிறுமி, Syed Munawar Hussain என்ற 32 வயது முஸ்லீமால் கடத்தப்பட்டு, மதம் மாற்றப்பட்டு கட்டாயத் திருமணம் செய்யப்பட்டுள்ளார் என, கடந்த சனிக்கிழமை ஆசியச் செய்தி நிறுவனம், ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. இந்த ஏழைச் சிறுமி கடந்த ஜூன் 20ம் தேதி இவளது வீட்டிலிருந்து கட்டாயமாக அந்த நபரால் கடத்தப்பட்டுள்ளார். சீனாவின் Hebei மாநிலத்தில் Qinyuan என்ற நகருக்கு அருகில் மறைக்கல்வி எடுத்ததற்காக Tian Dalong என்ற இளம் அருள்பணியாளரும், மற்றோர் இளம் அருள்பணியாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அன்பு நெஞ்சங்களே, கிறிஸ்தவ விசுவாசத்துக்காகப் பலவகையான சித்ரவதைகளையும் கொடுமைகளையும் இன்றும் பல நாடுகளில் கிறிஸ்தவர்கள் எதிர்கொள்கின்றனர்.
பல்வேறு கீழை வழிபாட்டுமுறை திருஅவையின் முதுபெரும் தந்தையர்கள், தலைவர்கள், கர்தினால்கள், பேராயர்கள் என 1200 பேருடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று நம்பிக்கை ஆண்டு நிறைவுக் கூட்டுத்திருப்பலியை நிகழ்த்தினார். கடுங்குளிரையும் பொருட்படுத்தாது, இத்திருப்பலியில் கலந்து கொண்ட ஏறக்குறைய ஒரு இலட்சம் விசுவாசிகளும், பாடகர் குழுவோடு சேர்ந்து விசுவாச அறிக்கையைப் பாடியபோது, முதல் திருத்தந்தையான தூய பேதுருவின் எலும்புகள் கொண்ட வெண்கலப் பெட்டியை ஏந்தியிருந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். "வத்திக்கான் பசிலிக்காவின் அடிநிலப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் திருத்தூதர் தூய பேதுருவின் எலும்புகள் எனக் கருதப்படுகின்றன"(Ex ossibus quae in Arcibasilicae Vaticanae hypogeo inventa Beati Petri Apostoli esse putantur) என்று இப்பெட்டியின்மேல் இலத்தீனில் எழுதப்பட்டுள்ளது. இந்த விசுவாச அறிக்கைக்கு முன்னதாக திருத்தந்தை பிரான்சிஸ் ஆற்றிய மறையுரையில், படைப்பின், மக்களின், வரலாற்றின் மையம் கிறிஸ்துவே என்பதை வலியுறுத்தினார். திருவழிபாட்டு ஆண்டின் மகுடமாக அமையும் அகிலத்தின் அரசர் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து பெருவிழாவாகிய இந்நாளில் நம்பிக்கை ஆண்டை நிறைவுக்குக் கொண்டு வருகிறோம். இந்த ஆண்டைத் தொடங்கி வைத்த நம் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களை அன்போடும் நன்றியோடும் இந்நேரத்தில் நினைக்கிறோம். இறைபராமரிப்பு மிக்க திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் இந்த முயற்சியின்மூலம், நம் திருமுழுக்கு நாளில் நாம் தொடங்கிய விசுவாசப் பயணத்தின் அழகை மீண்டும் கண்டுணர அவர் நமக்கு ஒரு வாய்ப்பை அளித்தார். இறைவனோடு முழுசந்திப்பு நடக்கும்போது இந்த விசுவாசப் பயணம் அதன் இறுதி முடிவை எட்டும் எனக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், இத்திருப்பலியில் கலந்துகொண்ட கீழை வழிபாட்டுமுறை திருஅவையின் தலைவர்களுக்கு நன்றி சொல்லியதோடு, புனித பூமி, சிரியா, மத்திய கிழக்குப் பகுதி முழுவதும் வாழும் கிறிஸ்தவர்களோடு அமைதியும் நல்லிணக்கமும் கொண்ட வாழ்த்தையும் பகிர்ந்து கொண்டார்.
இப்பெரு விழாவின் திருப்பலி வாசகங்கள் கிறிஸ்துவை மையமாக வைத்துப் பேசுகின்றன என்று சொல்லி அவற்றை விளக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். இரண்டாவது வாசகத்தில், புனித பவுல், கொலோசேயருக்கு(கொலோ.1:12-20) எழுதிய திருமடலில், கிறிஸ்துவே அனைத்துக்கும் தொடக்கமாக, அனைத்தின் மையமாக இருக்கிறார் என்பதை மிக ஆழமாகச் சொல்கிறார். இந்தக் கிறிஸ்து படைப்பின், ஒப்புரவின் ஆண்டவர். உண்மையான விசுவாசிகளாகிய நாமும், நம் நினைவிலும், செயலிலும் இயேசு கிறிஸ்துவை நம் வாழ்வின் மையமாக ஏற்று வாழ அழைப்புவிடுக்கப்படுகிறோம். இத்தகைய எண்ணங்களே கிறிஸ்தவர்களின் எண்ணங்கள், கிறிஸ்துவின் எண்ணங்கள். கிறிஸ்தவர்களின் செயல்கள், கிறிஸ்துவின் செயல்கள். இயேசு படைப்பின் மையமாக இருப்பதோடு, இறைமக்களின் மையமாகவும் இருக்கிறார். இதனை முதல் வாசகத்தில் பார்க்கிறோம். இஸ்ரயேலரின் அரசராகிய தாவீதின் வழி வந்த கிறிஸ்து, நம் சகோதரர். அவரைச் சூழ்ந்தே இறைமக்கள் உள்ளோம். அவரில் நாம் அனைவரும் ஒன்றாக உள்ளோம், ஒன்றிணைந்துள்ளோம். நமது வாழ்வின் மையமாகிய அவரில் இறைமக்கள் என்ற தனித்துவத்தைப் பெறுகிறோம் என்று உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், கிறிஸ்துவே மனித வரலாற்றின் மற்றும் ஒவ்வொரு மனிதரின் மையம் என்றும் கூறினார்.
இயேசு சிலுவையில் தொங்கியபோது நல்ல கள்வனுக்கு அவர் கூறிய பதிலைக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ், இயேசு அவ்வேளையில் கண்டன வார்த்தையை அல்ல, மன்னிப்புப் பற்றியே பேசினார் என்றார். இன்று நாம் ஒவ்வொருவரும் நமது வரலாற்றை, நமது வாழ்வுப் பாதை பற்றிச் சிந்திப்போம். நாம் ஒவ்வொருவரும் நமது தவறுகளோடு, நமது பாவங்களோடு, நமது மகிழ்ச்சியான மற்றும் இருளான நேரங்களோடு நமது வரலாற்றைக் கொண்டிருக்கிறோம். இந்நாளில் இயேசுவை நாம் மௌனத்தில் உற்றுநோக்குவோம். ஆண்டவரே, உமது இறையாட்சியில் என்னை நினைவுகூரும் எனச் சொல்வோம். ஆண்டவரே, நான் நல்ல மனிதராக மாற விரும்புகிறேன், இது எனது சக்தியால் முடியாது, நான் ஒரு பாவி எனச் சொல்லி, ஆண்டவரே, உமது இறையாட்சியில் என்னை நினைவுகூரும் என மீண்டும் சொல்வோம். நம் ஆண்டவர் நாம் செபத்தில் கேட்பதைவிட அதிகமாகத் தருவார். எனவே நாம் அவரிடம் கேட்க வேண்டும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்திருப்பலியின் இறுதியில் வழங்கிய மூவேளை செப உரையில், நூற்றாண்டுகளாக, உலகின் பல பகுதிகளில் நற்செய்தியை அறிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார், மேலும், தங்கள் விசுவாசத்துக்காக நசுக்கப்படும் சகோதர சகோதரிகளை அன்னைமரியின் பாதுகாவலில் வைப்பதாகவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
2012ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் தொடங்கி வைத்த இந்த நம்பிக்கை ஆண்டு நிறைவுத் திருப்பலியின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது முதல் "மறைத்தூது அறிவுரை" ஏட்டை வெளியிட்டார். "Evangelii Gaudium" அதாவது "நற்செய்தியின் மகிழ்ச்சி" என்ற தலைப்பிலான இவ்வேட்டை, பார்வையிழந்த ஒருவர் உட்பட 5 கண்டங்களின் 18 நாடுகளைச் சார்ந்த 36 பேருக்கு அடையாளப்பூர்வமாக வழங்கினார். மேலும், பிலிப்பீன்சில் ஹையான் புயலில் பாதிக்கப்பட்டவர்க்கென இத்திருப்பலியில் நிதி எடுக்கப்பட்டது. அன்பர்களே, இந்த நம்பிக்கை ஆண்டின் பல்வேறு நிகழ்வுகள், அகிலத் திருஅவை அளவிலும், மறைமாவட்டங்கள் அளவிலும், பங்கு அளவிலும் நடந்தன. இந்த நம்பிக்கை ஆண்டு விசுவாசிகளில் ஏற்படுத்தியுள்ள நல்தாக்கங்கள் பற்றிப் பகிர்ந்து கொள்கிறார் சேலம் ஆயர் மேதகு எஸ்.சிங்கராயன் அவர்கள். RealAudioMP3
இஞ்ஞாயிறன்று நிறைவடைந்துள்ள இந்த நம்பிக்கை ஆண்டின் தொடர்ச்சியாக, நம் ஒவ்வொருவர் வாழ்வும் கிறிஸ்துவுக்குச் சாட்சியாய் விளங்கட்டும், நம் வாழ்வின் ஒவ்வொரு சொல்லும் செயலும் கிறிஸ்துவை வெளிப்படுத்தப்பட்டும். உண்மையான கிறிஸ்தவராய் வாழ்வோம். புனித பவுல் உறுதியான நம்பிக்கையுடன் சொல்லியிருப்பதுபோன்று, இயேசு நம் இறுதிநாள்வரைக் காத்திட வல்லவர். நமது நம்பிக்கை எப்படியோ அப்படியேதான் நம் வாழ்வும் அமையும்.







All the contents on this site are copyrighted ©.