2013-11-25 16:07:52

யுக்ரேய்ன் நாட்டுத் திருப்பயணிகளுடன் திருத்தந்தை சந்திப்பு


நவ.,25,2013. யுக்ரேய்ன் நாட்டின் புனிதர் ஜோசப்பாத்தின் புனிதப்பொருள்கள், வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவிற்கு மாற்றப்பட்டதன் 50ம் ஆண்டு நினைவைச் சிறப்பிக்கும்விதமாக வந்திருந்த உக்ரைன் திருப்பயணிகளை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ், கிறிஸ்தவ ஒன்றிப்பின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
புனித ஜோசப்பாத் குறித்த நம் நினைவுகள், புனிதர்களின் ஒன்றிப்பையும், கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் அனைவரிடையேயும் நிலவவேண்டிய ஒன்றிப்பையும் நமக்கு எடுத்துரைப்பதாக உள்ளன என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், புனிதர்களின் மகிழ்ச்சிநிறை சகோதரத்துவத்தை உள்ளடக்கியதாக இருக்கும் மறுவுலக வாழ்வை முன்னோட்டமாகத் தருவதாக கிறிஸ்தவர்களிடையேயான இவ்வுலக ஒன்றிப்பு உள்ளது என்றார்.
திருஅவையின் ஒன்றிப்பின் வழியாக, ஒத்துழைப்பிற்கான ஆவல், ஒருவர் மற்றவரிடமிருந்து கற்றுக்கொள்ளல், விசுவாசத்தின் ஒன்றிணைந்த சாட்சியாக விளங்குதல் போன்றவைகளின் மூலம் கிறிஸ்தவ வாழ்வின் ஒவ்வொரு கூறையும் வழிநடத்தமுடியும் என்றார் திருத்தந்தை.
ஒன்றிப்பிற்கான ஆவல், ஒருவர் மற்றவரைப் புரிந்துகொள்ளவும், மதிக்கவும், ஏற்றுக்கொள்ளவும், சகோதரத்துவத் திருத்தங்களை வழங்கவும் நம்மை அழைத்துச்செல்கிறது என உக்ரைனிலிருந்து வந்திருந்த கிரேக்க-கத்தோலிக்க வழிபாட்டுமுறை திருப்பயணிகளிடம் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.