2013-11-23 15:51:37

மியான்மாரின் ரோகின்யா விவகாரத்துக்குத் தீர்வு காண்பதற்கு பல்சமய உரையாடலே சிறந்த வழி, யாங்கூன் பேராயர்


நவ.23,2013. மியான்மாரின் ரோகின்யா விவகாரத்துக்குத் தீர்வு காண்பதற்கு பல்சமய உரையாடலே சிறந்த வழி எனவும், அரசியல்ரீதியான தீர்மானங்களைவிட சமயத்தலைவர்கள் மத்தியில் இடம்பெறும் உண்மையான உரையாடலே சிறந்தது எனவும் யாங்கூன் பேராயர் சார்லஸ் போ கூறியுள்ளார்.
மியான்மாரில் இராணுவ சர்வாதிகார ஆட்சிக்குப் பின்னர் அந்நாடு தற்போது எதிர்கொள்ளும் ரோகின்யா இன மக்கள் பிரச்சனைகள் குறித்துப் பேசிய யாங்கூன் பேராயர் போ, இப்பிரச்சனைக்குப் பல்சமய உரையாடலே சிறந்த வழி எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
ரோகின்யா சிறுபான்மை இன முஸ்லீம் மக்களுக்கு குடியுரிமை வழங்குமாறு ஐ.நா. கூறியதை, மியான்மார் அரசு அதிகாரிகள் உடனடியாக நிராகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய பேராயர் போ, ரோகின்யா முஸ்லீம்கள், பங்களாதேஷிலிருந்து வந்து மியான்மாருக்குள் சட்டத்துப் புறம்பே குடியேறியுள்ளவர்கள் என மியான்மார் அதிகாரிகள் கூறுவதையும் குறிப்பிட்டுள்ளார்.
2012ம் ஆண்டில் ஓர் இளம் புத்தமதப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டதையடுத்து ராக்கின் மாநிலத்தில் புத்தமதத் தீவிரவாதிகளுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே கடும் வன்முறை தொடங்கியது. இதில் நூற்றுக்கணக்கானோர் இறந்தனர், பல வீடுகள் அழிக்கப்பட்டன மற்றும் குறைந்தது ஒரு இலட்சத்து 60 ஆயிரம் பேர் புலம் பெயர்ந்தனர்.

ஆதாரம்: AsiaNews







All the contents on this site are copyrighted ©.