2013-11-23 15:50:56

திருத்தந்தை பிரான்சிஸ் : விளையாட்டு அமைப்புகள், மனித மற்றும் ஆன்மீக விழுமியங்களை ஊக்கவிக்க வேண்டும்


நவ.23,2013. நல்ல முறையில் நடத்தப்படும் விளையாட்டுகள், மனித உறவுகள், நட்புறவுகள், விதிமுறைகளை மதித்தல் ஆகியவற்றை ஊக்குவிப்பதால், பல்வேறு விளையாட்டு அமைப்புகள், மனித மற்றும் ஆன்மீக விழுமியங்களை ஊக்குவிக்க வேண்டும் என ஊக்கப்படுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். எல்லைகள், நாடுகள், மொழிகள், மதங்கள், இனங்கள், கருத்துக் கோட்பாடுகள் என அனைத்தையும் கடந்து ஓர் உலகளாவிய மொழியாக விளையாட்டு இருப்பதால், இது மக்களை ஒன்றிணைத்து உரையாடலை ஊக்குவிக்க முடியும் என, ஐரோப்பிய ஒலிம்பிக் குழுவின் பிரதிநிதிகளை இச்சனிக்கிழமை முற்பகலில் திருப்பீடத்தில் சந்தித்தபோது கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இளைய தலைமுறைகளுக்குப் பயிற்சிகள் அளிக்கும் இந்த ஒலிம்பிக் குழு போன்ற அமைப்புகளும் நிறுவனங்களும், அமைதி, பகிர்வு, மக்கள் மத்தியில் நல்லிணக்கம் ஆகியவற்றுக்கான பாதையில் பயிற்சிகளை அளிக்குமாறும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
விளையாட்டு குறித்த திருஅவையின் கண்மோட்டம் பற்றியும் பேசிய திருத்தந்தை, மனிதரின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு உதவும் விலைமதிப்பில்லாத கருவியாக, விளையாட்டுக்களைத் திருஅவை பார்க்கின்றது எனவும், இதனால் திருஅவைக்கும், விளையாட்டுக்கும், இடையேயுள்ள பிணைப்பு அழகானதாக இருக்கின்றது என்றும் கூறினார்.
விளையாட்டு, வெற்றியை அல்லது பொருளாதார ஆதாயத்தை மட்டுமே வைத்து நிர்ணயிக்கப்படும்போது அது விளையாட்டுவீரர்களை வெறும் விற்பனைப் பொருள்களாக மாற்றிவிடும் எனவும் எச்சரித்த திருத்தந்தை பிரான்சிஸ், விளையாட்டின் உண்மையான பண்புகளைக் வெளிக்கொணர ஐரோப்பிய ஒலிம்பிக் குழுவினர் உழைக்குமாறும் உற்சாகப்படுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.