2013-11-23 15:51:46

இந்திய உணவு பாதுகாப்பு உரிமை சட்டத்துக்கு ஐ.நா. அதிகாரி பாராட்டு


நவ.23,2013. உலகில் ஊட்டச்சத்துப் பற்றாக்குறை உள்ளவர்களில் ஏறக்குறைய நான்கில் ஒரு பகுதியினர் வாழும் இந்தியாவில், ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு அரசு எடுத்துவரும் முயற்சிகளைப் பாராட்டியுள்ளார் ஐ.நா. அதிகாரி ஒருவர்.
WFP என்ற ஐ.நா.வின் உலக உணவுத் திட்ட அமைப்பின் இயக்குனர் Ertharin Cousin இந்தியாவுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டபின்னர் நிருபர்களிடம் பேசியபோது, இந்தியாவில் உணவு பாதுகாப்பு உரிமை சட்டம் அமலில் இருப்பதை பாராட்டியுள்ளார்.
கடந்த செப்டம்பரில் கையெழுத்திடப்பட்ட தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்மூலம், நாட்டின் 80 கோடிக்கு மேற்பட்ட மக்களுக்கு குறைந்த விலையில் உணவு கிடைக்க வழிசெய்யப்பட்டுள்ளது.
WFPஅமைப்பின் உலகளாவிய உணவு உதவிக்கு இந்திய அரசு ஆதரவாக இருப்பதற்கு நன்றி தெரிவித்த Cousin, இந்தியாவிலிருந்து கிடைக்கும் 18 இலட்சம் டாலரைக் கொண்டு ஏமனிலுள்ள 1,21,300 பேருக்கு அடுத்த ஆறு மாதங்களுக்கு உணவளிக்க முடியும் என்று தெரிவித்தார்.
உலகில் ஏழ்மையை ஒழிப்பதற்கு முயற்சித்துவரும் பெரிய பன்னாட்டு WFPஅமைப்பு, கடந்த ஆண்டில் 80 நாடுகளில் 9 கோடியே 70 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு உணவளித்துள்ளது.

ஆதாரம்: UN







All the contents on this site are copyrighted ©.