2013-11-22 16:02:50

நவ.23,2013 கற்றனைத்தூறும்... தாமரை மலர்


தாமரை மலர் இந்தியர்களாலும், சீனர்களாலும் புனித மலர் என்று போற்றப்பட்டு இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படும் மலர்களுள் ஒன்றாகும். இலக்கியங்களில் தாமரை அழகான கண்களுக்கு ஒப்பிட்டு கூறப்படுகிறது. இறைவனின் கண்கள்தான் தாமரைக்கண்கள் என்று தாமரையுடன் ஒப்பிடுவது வழக்கம். சிதிலமடைந்த சிற்பங்களினால், தாமரை மலர் பண்டைய காலத்தில் எகிப்தில் இருந்தது தெரியவந்துள்ளது. ஆனால் தற்போது அந்நாட்டில் இல்லை. தாமரையின் தாயகம் எகிப்து என்றும், ஜப்பான் என்றும் நிபுணர்களிடையே சர்ச்சை உள்ளது. இந்தியாவில் கிடைத்த படிவங்களின்படி இந்தியாவில்தான் தாமரை தோன்றியிருக்க வேண்டும் என்று தெரிகிறது.
பழங்காலத்திலிருந்தே தாமரை ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுவதால், அதைப் பற்றிய விவரங்கள் ஆயுர்வேத நூல்களில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பழைய நூல்களில், தாமரை ஓர் இனிய, குளுமையான, எரிச்சலைக் குறைத்து தணிய வைக்கும் தன்மைகள் உடையதாக கூறப்படுகிறது. கப, பித்தங்களைச் சீராக்கவும், பேதி, சீதபேதி இவற்றுக்கு மருந்தாகவும் பயனாகிறது.
வெள்ளைத் தாமரை, சருமத்தை அழகுப்படுத்தவும், நரம்புகளை வலுவாக்கவும் உதவுகிறது. கண்களுக்கும் இரத்தக் கோளாறுகளுக்கும் நல்லது. பொதுவாக, தாமரை இலைகள் உடல் சூட்டை குறைக்க உதவுகின்றன. சந்தனம், நெல்லிக்காயுடன் சேர்ந்து நல்ல பலனளிக்கும். தாமரை மலரும் குளுமை ஊட்டும். பூவிதழ்களும், அதன் உள் உள்ள மெல்லிய நார்களும் மூலநோய்க்கு மருந்தாகும். தாமரைப் பூவை இடித்து சாறு எடுத்து, பசு வெண்ணெய்யுடன் கலந்து உண்டால் மூலநோய் மறையும்.
கமல காண்ட சூரணம் எனும் தாமரை மருந்தை மனப்பிரச்சனை நோய்களுக்கு உபயோகிப்பது நல்லது என்று காசி விஷ்வ வித்யாலயா (Banares Hindu University) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆதாரம் : ayurvedamtoday








All the contents on this site are copyrighted ©.