2013-11-22 15:57:34

திருத்தந்தை பிரான்சிஸ்:ரக்பி கால்பந்து விளையாட்டு நம் வாழ்வு பற்றிச் சிந்திப்பதற்கு அழைக்கிறது


நவ.22,2013. ஓர் இலக்கை நோக்கி விளையாடப்படும் ரக்பி கால்பந்து விளையாட்டு, நம் வாழ்வு பற்றிச் சிந்திப்பதற்கு அழைக்கிறது, ஏனெனில் நமது வாழ்வு முழுவதும் ஓர் இலக்கை நோக்கியேச் செல்கின்றது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆயினும், இதற்கு கடும் உழைப்பு தேவைப்படுகின்றது, இந்த இலக்கைத் தனியாக அடைவதில்லை, பந்தானது ஒவ்வொருவர் கையிலும் சென்று இறுதி இலக்கை அடைவது போன்று, இந்த இலக்கை எட்டுவதற்குச் சேர்ந்து ஓடவேண்டியிருக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலி மற்றும் அர்ஜென்டீனாவின் தேசிய கால்பந்து அணிகள், ரக்பி கால்பந்து விளையாட்டை இச்சனிக்கிழமையன்று உரோம் ஒலிம்பிக் அரங்கத்தில் விளையாடவிருப்பதை முன்னிட்டு, இவ்வெள்ளியன்று தன்னை திருப்பீடத்தில் சந்தித்த இவ்விரு குழுவினரிடமும் இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ரக்பி கால்பந்து விளையாட்டுக்குத் தேவைப்படும் மனஉறுதி, நேர்மை, குழு உணர்வு ஆகிய பண்புகளை இவ்விளையாட்டு வீரர்கள் தங்கள் சொந்த வாழ்வில் கொண்டிருக்குமாறும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இது கடினமான விளையாட்டாக இருந்தாலும், மிகவும் அழகானது என்றும் கூறினார்.
ரக்பி கால்பந்து விளையாட்டில் உடல்ரீதியாக மோதல்கள் இருந்தாலும், வன்முறை இல்லை, மாறாக, மிகுந்த நேர்மையும் பிறரை மதித்தலும் உள்ளன என்றும் உரையாற்றிய திருத்தந்தை, இது, குணநலன்களை உருவாக்கவும், மனஉறுதியை வலுப்படுத்தவும் உதவுகின்றது என்றும் கூறினார்.
மேலும், இவ்வுரைக்கு முன்னர், அனைத்துலக கால்பந்து விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் Joseph S. Blatterயும் திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்விரு அணிகளும் ஒலிவ மரம் ஒன்றையும் திருத்தந்தைக்குப் பரிசாக அளித்தனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.