2013-11-22 16:02:57

திருத்தந்தை பிரான்சிஸ் பிலிப்பீன்ஸ் சமூகத்திடம் : குழந்தையின் எளிமையில் செபிக்க வேண்டுகோள்


நவ.22,2013. ஹையான் புயலின் கடும் பாதிப்பை எதிர்கொண்டிருக்கும் பிலிப்பீன்ஸ் மக்களின் செபம், குழந்தையின் செபம் போன்று இருந்தாலும்கூட, அவர்கள் சோர்வுறாமல் தொடர்ந்து செபிக்குமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோம்வாழ் பிலிப்பீன்ஸ் மக்களை, மனிலா கர்தினால் லூயிஸ் அந்தோணியோ தாக்லே தலைமையில், வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில் இவ்வியாழன் மாலை சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ், அண்மையில் அந்நாடு எதிர்கொண்ட ஹையான் கடும் புயல் பற்றியும் குறிப்பிட்டார்.
நாம் புரிந்துகொள்ள இயலாத பல காரியங்கள் உள்ளன, சிறார் வளரத் தொடங்கும்போது பல காரியங்களை அவர்கள் புரிந்துகொள்வதில்லை, அதனால் அவர்கள் தங்கள் பெற்றோரிடம் அடுத்தடுத்து கேள்வி கேட்கின்றனர், அவர்கள் பதிலுக்காகக் காத்திருப்பதில்லை என்றுரைத்த திருத்தந்தை, இறைவனின் குழந்தைகளாகிய நாம், ஏன் என்ற செபத்தை, சிறப்பாக, துன்ப நேரங்களில் இச்செபத்தைச் செபிக்க வேண்டும் எனக் கூறினார்.
பிலிப்பீன்ஸ் புனிதராகிய Pedro Calungsodவின் திருவுருவத்தை வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில் வைப்பதற்கென இடம்பெற்ற நிகழ்வில் அந்நாட்டினைரச் சந்தித்து இவ்வாறு உரையாற்றினார் திருத்தந்தை.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட மொசேய்க் வேலைப்பாடு நிறைந்த இப்புனிதரின் திருவுருவம் வத்திக்கான் பசிலிக்காவுக்குக்கீழ், திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களின் கல்லறைக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது.
புனித பேதுரு மொசேய்க் தொழிற்சாலையால் ஏறக்குறைய 600 விதமான கற்கள், அமைப்புகள் மற்றும் வண்ணங்களால் இத்திருவுருவம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.