2013-11-22 16:05:06

கிறிஸ்தவப் பற்றுறுதி இறைவனின் மறைபொருளான திட்டத்தில் நம்பிக்கை கொண்டுள்ளது, திருத்தந்தை பிரான்சிஸ்


நவ.22,2013. இறைவனின் மறைபொருளான திட்டம், மனிதரின் கனவுகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் எதிராக இருப்பதுபோல் சில வேளைகளில் தெரிந்தாலும், கிறிஸ்தவப் பற்றுறுதி, “இறைவனின் நாளைய தினத்தில்” நம்பிக்கை கொண்டுள்ளது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இறைவனின் வாக்குறுதியில் உண்மை இல்லை, நான் ஏமாற்றப்பட்டுவிட்டேன் என்று அன்னை மரியா, சிலுவையில் தனது மகன் இறந்தநிலையில் நினைத்திருக்கலாம், ஆனால் அன்னை மரியா அப்படி நினைக்கவில்லை என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், நம்பியதால் நற்பேறுபெற்றிருந்த அன்னை மரியா, புதிய எதிர்காலம் மலருவதை தமது விசுவாசத்தால் பார்த்தார் எனவும், இறைவனின் நாளைய தினத்துக்காகக் நம்பிக்கையோடு காத்திருந்தார் எனவும் கூறினார்.
அன்னை மரியா ஆலயத்தில் நேர்ந்தளிக்கப்பட்ட விழாவான இவ்வியாழன் மாலையில் உரோம் அவென்ட்டைன் குன்றிலுள்ள புனித வனத்து அந்தோணியார் தியான யோக துறவு இல்லம் சென்று, அங்கிருந்த 21 அருள்சகோதரிகளுடன் திருநற்கருணை ஆராதனையில் பங்குகொண்டபோது இவ்வாறு உரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நம்பிக்கையின் தாயாகிய அன்னை மரியா, தம் வாழ்வில் வியப்புகளையும் இன்னல்களையும், இறைவனின் திட்டத்தில் தடுமாற்றமில்லாத நம்பிக்கையுடன் எதிர்கொண்டார் எனவும் கூறினார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.