2013-11-20 14:35:25

நவ.21,2013 கற்றனைத்தூறும்... சௌ சௌ


நாம் உணவில் எப்போதாவது சேர்த்துக்கொள்ளும் காய்கறிகளில் சௌசௌவும் ஒன்று. சௌசௌவில் வைட்டமின் ஏ, பி, சி, கே போன்ற சத்துகள் அடங்கியுள்ளன. 100 கிராம் சௌசௌவில் 17.8 விழுக்காடு கார்போஹைட்ரேட், 10.7 விழுக்காடு ஸ்டார்ச், 10.5 விழுக்காடு போலேட் சத்து, 5.4 விழுக்காடு புரதசத்து, 6.7 விழுக்காடு சுண்ணாம்பு சத்து, 4.8 விழுக்காடு பாஸ்பரஸ், 9 விழுக்காடு மாங்கனீசு ஆகிய சத்துக்கள் உள்ளன.
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சௌசௌ காயைச் சாப்பிடலாம். இது நரம்புத் தளர்ச்சியைப் போக்கி நரம்புகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. வயிறு சம்பந்தமான அனைத்துப் பிரச்சனைகளை நீக்கி வயிற்றைச் சுத்தமாக வைத்துக்கொள்ளும் சக்தி இதற்கு உண்டு. உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து உடலை சமநிலையில் வைத்துக்கொள்ளும். மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்தக் காயை வாரம் இரு முறை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இக்காய், பெருங்குடல், சிறுகுடல் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்கி குடல் மூலம் உருவாகக்கூடிய பிரச்சனைகளைச் சரிப்படுத்துகிறது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கை, கால்களில் வீக்கம் ஏற்படும். ஆதலால் நீர்சத்து மிகுந்த காய்களில் ஒன்றான சௌசௌவை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதை உணவில் சேர்த்துக்கொள்வதால் குழந்தையையும் நோய் தொற்றிலிருந்து இது பாதுகாக்கிறது. சிறு வயதிலேயே முகச்சுருக்கம் ஏற்பட்டுவிட்டதே எனக் கவலைப்படுபவர்கள் சௌசௌவை உணவில் தாராளமாகப் பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள சுருக்கம் நீங்கிவிடும்.
சௌசௌவில் காணப்படும் வைட்டமின்கள் புற்றுநோய்த் தடுப்பியாக செயல்படுகிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தைராய்டு கோளாறால் கஷ்டப்படுபவர்கள் சௌசௌவைப் பயன்படுத்தலாம். சௌசௌவில் கால்சியம் சத்துகள் காணப்படுவதால் எலும்புகளை வலுப்பெற செய்கிறது. எனவே வளரும் குழந்தைகளுக்கு சௌசௌ காயை உண்ணக் கொடுக்கலாம்.
கொழுப்புகளைக் குறைக்கவும் இது பயன்படுகிறது. வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் சேர்ந்து இருக்கும் அதிகப்படியான கொழுப்புகளைக் கரைக்க சௌசௌவை சூப் செய்து பருகினால் நல்ல பலன் கிடைக்கும். சௌசௌவை வேகவைத்து உப்பு, மிளகு, தண்ணீர் சேர்த்து சூப் செய்து காலை, மாலை வேளையில் உணவிற்குமுன் பருகலாம்.

ஆதாரம் : தினகரன்







All the contents on this site are copyrighted ©.