2013-11-20 15:11:49

அன்னைமரியா திருத்தலங்கள் - அதிசய மணல் மாதா திருத்தலம், சொக்கன்குடியிருப்பு, தமிழ்நாடு


நவ.20,2013. மணல் மாதா திருத்தலம், தூத்துக்குடி மாவட்டம் சொக்கன்குடியிருப்பிலிருந்து ஏறக்குறைய 5 கி.மீ. தொலைவில் தேரியோரக்கரையில் அமைந்துள்ளது. இது தூத்துக்குடி மாவட்டத்தின் பங்குகளில் ஒன்றான சொக்கன்குடியிருப்போடு இணைந்துள்ளது. இப்பகுதி, சிவப்பு பட்டுக்கம்பளம் விரித்தாற்போல் சிவப்பு மணலால் நிரம்பியுள்ளது. இவ்விடம் மணலால் நிரம்பியிருப்பதற்கு ஒரு வரலாறு சொல்லப்படுகிறது. சேசுமரியாயி என்பவர், கணக்கன்குடியிருப்பில் வாழ்ந்துவந்த பக்தியுள்ள கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தவள். பனைத்தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வந்த இவரது தந்தை, திடீரென்று ஒருநாள் பனைத்தொழிலில் ஏற்பட்ட விபத்தினால் இறந்தார். குடும்பம் வறுமையில் வாடியது. சேசுமரியாயியின் தாய் கூலி வேலை செய்து தன் மகளை, கண்ணும் கருத்துமாய் வளர்த்து வந்தார். சேசுமரியாயி ஏழையாய் இருந்தாலும் அழகாய் இருந்தார். அந்த ஊர் பணக்காரர் மகன் உட்பட பல இளையோர் அவரை அடைய முயன்று தோற்றனர். ஆயினும், சேசுமரியாயின் தாய், தன் மகள் விரும்பியபடி தனது உறவினர் சூசைமுத்துவிற்கு அவரை மணமுடித்து வைத்தார். பணக்காரரின் மகன் கடுஞ்சினம் கொண்டு தந்திரமாக சூசைமுத்துவை கொலை செய்துவிட்டு விபத்தில் இறந்து விட்டதாக ஊரை நம்பவைத்து விட்டான். சேசுமரியாயியின் துயரைக் காண சகிக்காமல் அவரது தாயும் இறந்தார்.
தாயின் இறப்புக்குப் பின்னர் சேசுமரியாயி ஒருவேளை உணவுக்கே கஷ்டப்பட்டார். அன்னைமரியாமீது பக்தி கொண்ட சேசுமரியாயி மாதாவின் காலடியில் தஞ்சமடைந்தார். கணக்கன்குடியிருப்பின் வடபுறத்தில் 'புத்தன்தருவை' என்னும் குளம் உள்ளது. சுமார் 1200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்குளத்தில் எல்லாப் பருவ காலங்களிலும் தண்ணீர் வற்றாது. இங்கு பெரும் அளவில் வெளிநாட்டுப் பறவைகள் வந்து தங்கின. குறிப்பாக நாரை என்னும் கொக்கு இனங்கள் கூட்டம் கூட்டமாக இங்கு வாழ்ந்ததால் இக்குளத்திற்கு 'நாரைக்குளம்' என்ற மற்றொரு பெயரும் உண்டு. ஒருநாள் அன்னை மரியா, சேசுமரியாயியிக்கு கனவில் தோன்றி, "மகளே அஞ்சாதே! இறைவல்லமையின் மகிமையை காலையில் காண்பாய்" என்று கூறி மறைந்தார். சேசுமரியாயியின் வீட்டின் முன்பு பெரிய ஆலமரம் ஒன்று இருந்தது. அம்மரத்தில் நாரைகள் கூடுகட்டி வாழ்ந்து வந்தன. ஒருநாள் ஆலமரத்தடியில் பறவைகளின் எச்சங்களுடன் ஏராளமான மீன்களும் சிதறிக் கிடந்தன. இவ்வதிசயத்தைக் கண்ட சேசுமரியாயி இரவில் தான் கண்ட காட்சியை நினைத்து, இது அன்னை மரியாளின் திருவிளையாடல் என்று உணர்ந்து அந்த மீன்களையெல்லாம் சேகரித்து சமைத்து உண்டு வந்தார். அன்றிலிருந்து நாரைகள், குளத்தில் மீன்களைப் பிடித்து உண்டுகளித்து, இரவில் மரத்தில் தங்க வரும்போது மீன்களை எடுத்து வந்து சேசுமரியாயியின் வீட்டில் போடுவதை வழக்கமாகக் கொண்டன.
இந்நிகழ்வைக் கேள்விப்பட்ட அந்த ஊர் பணக்காரர் மகன் சேசுமரியாயியிக்கு பறவைகள் மீன் தரவில்லை, யாரோ ஓர் ஆண் இரவில் வந்து தங்கிவிட்டு மீன்களைக் கொடுத்துவிட்டுச் செல்கிறான். இப்படிப்பட்ட விபச்சாரிகளை ஊரில் வைக்கக் கூடாது என்று மக்களைத் தூண்டி விட்டான். ஊர் மக்கள் அனைவரும் சேசுமரியாயி விபச்சாரி என்று பழி சுமத்தி மன்னன் துறவிப்பாண்டியன் முன் கொண்டு நிறுத்தினார்கள். சேசுமரியாயி தான் குற்றமற்றவள் என்று சொல்லியும் யாரும் அதைப் பொருட்படுத்தவில்லை. மன்னரும் சூழ்நிலையின் கைதியானார். சேசுமரியாயியை அக்கால வழக்கப்படி நடைவிளக்கெரித்து கொலைசெய்ய உத்தரவிட்டார் மன்னர். நடைவிளக்கெரித்தல் என்பது அக்காலத்தில் விபச்சாரக் குற்றத்திற்கு அளிக்கும் கொடூரமான தண்டனையாகும். குற்றவாளியின் தலையை மொட்டை அடித்து, கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, கழுத்தில் எருக்குமாலை, செருப்புமாலை அணிவித்து, சிறிய அளவில் சிலுவை வடிவம் செய்து தோளில் வைத்து, தலையில் முள்முடி வைத்து இறுதியில் உச்சியில் சிறிய துளையிட்டு எண்ணெய் ஊற்றி தீ வைத்து எறிந்த நிலையில் ஊர்வலமாகக் கொண்டு செல்வர். தீ மெல்ல மெல்ல பரவி, பெருந்தீயாக மாற குற்றவாளி துடிதுடித்துச் சாவாள். இந்தக் கொடிய தண்டனையில் நெருப்பின் வெப்பம் தாங்கமுடியாமல் சேசுமரியாயி இறுதியில் சாபமிட்டார். என்னை அவமானப்படுத்திய கணக்கன்குடியிருப்பு அழியட்டும். மண்மாரி பொழியட்டும். மண்மேடாய் குவியட்டும். ஒருவர்கூட உயிர் தப்பாது செத்தொழியட்டும் என்றபடி உயிர்விட்டார். உடனடியாக பெரும் சூறாவளி வீசியது; மண்மாரிப் பொழிந்தது. ஊர் முழுவதும் அழிந்தது. அத்தோடு அன்னையின் ஆலயமும் மண்ணுக்குள் புதைந்து மறைந்து போனது. கணக்கன்குடியிருப்பின் அப்பகுதி கொடிய விலங்குகள் வாழும் வனாந்திரமாக மாறிப்போனது. பிற்காலத்தில் தோண்டியெடுக்கப்பட்ட இந்த அன்னையின் ஆலயம்தான் அதிசய மணல்மாதா ஆலயமாகும். மணற்பரப்பான இவ்விடத்தில் தற்போது முட்புதர்களுக்கும் காட்டுச் செடிகளுக்கும் குறையில்லை. அங்குமிங்கும் சில ஆலமரங்களும், அத்திமரங்களும் உள்ளன.
தருவை என்ற ஊரை அடுத்துள்ள இந்த மணல்மேடு பகுதியிலுள்ள காடுகளில் ஆடு மேய்க்கும் இடையர்கள் ஆலமர நிழலில் தங்கி இளைப்பாறிச் செல்வது வழக்கம். ஒருமுறை சொக்கன் குடியிருப்பைச் சேர்ந்த இடையன் ஒருவன், இந்த மணல் மேட்டில் ஆடுகளை ஓட்டிச் சென்றான். அவன் ஆடுகளை ஓட்டிச் சென்றபோது, புதையுண்ட மாதா சிற்றாலயத்தின் முகப்புச்சிகரத்திலிருந்த சிலுவை அவனது காலில் தட்டுப்பட்டது. அது என்னவென்று அறிய மணலைச் சிறிது தோண்டியபோது முழுச்சிலுவையும், அதன் கீழேயிருந்த கூரை ஓடுகளும் தென்பட்டன. உடனே அவன் ஓடோடிச் சென்று தனது சொக்கன் குடியிருப்பு மக்களிடம் விவரம் சொன்னான். மக்கள் திரளாக விரைந்து வந்து இன்னும் ஆழமாக மணலைத் தோண்டினர். இவ்வகழ்வுப் பணியில் சுற்றுப்புற ஊர்களைச் சேர்ந்த மக்களும் ஒத்துழைத்தனர். சில வாரங்களுக்குள் மண்ணுக்குள்ளிருந்த கோயில் முழுவதும் வெளிப்பட்டது.
தோண்டி எடுக்கப்பட்ட ஆலயத்திற்குள் மக்கள் முதன்முதலாக நுழைந்தபோது பீடத்தின் நடுவிலிருந்த அன்னைமரியா திருவுருவத்தின் இருபக்கங்களிலும் இரு மெழுகுவர்த்திகள் அதிசயமாக அணையாது எரிந்து கொண்டிருந்தன என்று மக்கள் பேசி வருகின்றனர். அங்கே நடுப்பீடத்தில், குழந்தை இயேசுவைக் கையில் ஏந்திய பாணியில் விண்ணக அன்னையின் அழகிய திருவுருவமும் இருக்கக் கண்டனர். அன்றிலிருந்து அன்னையின் ஆலயத்தை மக்கள், பரலோக மாதா ஆலயம் எனவும், அதிசய மணல் மாதா ஆலயம் எனவும் அழைக்கலாயினர். இவ்வன்னையின் இருமருங்கிலும் இயேசு சபையை ஆரம்பித்த புனித இஞ்ஞாசியார், அந்தோணியார் ஆகிய இருவரின் திருவுருவங்கள் உள்ளன. இதனால் இவ்வாலயத்தை முதன்முதலில் இயேசு சபைக் குருக்கள்தான் கட்டியெழுப்பினர் என்பதை ஊகிக்கலாம். இவ்வாலயம் தோண்டியெடுக்கப்பட்டு, இந்த 2013ம் ஆண்டுடன் 215 ஆண்டுகள் (1798-2013) ஆகின்றன. ஆண்டுதோறும் மே மாதம் நடைபெறும் இந்த ஆலயத் திருவிழாவுக்கு உலகமெங்கும் வாழும் மக்கள் வந்து குவிகின்றனர். ஆலயச் சிறப்பையும், அன்னையின் மகிமையையும் கண்டு தமிழக அரசு 2012ம் ஆண்டு இந்த ஆலயத்தை தமிழக அரசின் சுற்றுலாத் தலமாக அறிவித்து ஆலயத்திற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.
இந்த அதிசய மணல் மாதா ஆலயம், ஆண்டு முழுவதும் மக்கள் தரிசித்துச் செல்லும் புகழ் பெற்ற ஒரு திருத்தலமாக விளங்குகிறது. முன்னொரு காலத்தில் இந்த மணல் மாதாவின் திருத்தலம் அமைந்திருந்த ஊர், ‘கணக்கன் குடியிருப்பு’ என்றும் அழைக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் அதிசய மணல்மாதா திருவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.