2013-11-20 15:48:50

அனைத்துலக விவசாயக் குடும்பகள் ஆண்டுக்குத் திருத்தந்தை வாழ்த்து


நவ.20,2013. நவம்பர் 22, இவ்வெள்ளியன்று ஐக்கிய நாடுகள் நிறுவனம் தொடங்கவிருக்கும் அனைத்துலக விவசாயக் குடும்பகள் ஆண்டு பற்றியும் இப்புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ், பொருளாதார வளர்ச்சிக்கும், சமூக ஒருமைப்பாட்டுக்கும், படைப்பை மதிப்பதற்கும், முழு மனித சமுதாயத்தின் அறநெறி அமைப்புக்கும் வேளாண்மைத் தொழிலைக் குடும்பமாகச் செய்வதால் கிடைக்கும் எண்ணற்ற பலன்களைச் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய நாடுகள் நிறுவனம் மற்றும் பிற நிறுவனங்களின் முயற்சியால் ஊக்குவிக்கப்படும், விவசாயக் குடும்பகள் ஆண்டு, வேளாண்தொழில் செய்யும் குடும்பங்களின் வேளாண் அமைப்புகள் முன்னேறுவதற்குச் செயல்திறமிக்க கொள்கைகள் உருவாக்கப்பட உதவும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார் திருத்தந்தை.
இன்னும், பூர்வீக இனக் குழுக்கள், மீனவக் குடும்பங்கள், கூட்டுறவு அமைப்புகள், சிறு குழுக்கள் ஆகியவற்றின் உறுதியான வளர்ச்சிக்கும் இவ்வாண்டு உதவும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஐ.நா.பொது அவையின் 66வது அமர்வில், 2014ம் ஆண்டை, அனைத்துலக விவசாயக் குடும்பகள் ஆண்டாகக் கடைப்பிடிப்பதற்குத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த குடும்ப வேளாண்மைத் தொழில் ஆண்டு, அதிகாரப்பூர்வமாக, நவம்பர் 22, இவ்வெள்ளியன்று ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் நியுயார்க் தலைமையகத்தில் தொடங்கவுள்ளது.







All the contents on this site are copyrighted ©.