2013-11-19 15:27:00

நினைவாற்றல் இழப்பு நோயால் பாதிக்கப்பட்டவர் குறித்த வத்திக்கான் அனைத்துலக கருத்தரங்கு


நவ.19,2013. அல்செய்மர் என்ற நினைவாற்றல் இழப்பு நோயால் மட்டும் இன்று உலகில் 3 கோடியே 50 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், ஒவ்வொரு நாளும் 77 இலட்சம் பேர் புதிதாகப் பாதிக்கப்படுவதன் மூலம் இவ்வெண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்றும் திருப்பீட நலவாழ்வுப்பணி அவைத் தலைவர் பேராயர் Zygmunt Zimowski கூறினார்.
இந்நோயாளிகளின் எண்ணிக்கை 2030ம் ஆண்டில் 6 கோடியே 50 இலட்சத்தைத் தாண்டும் எனவும் எச்சரித்தார் பேராயர் Zimowski.
“வயதான நோயாளிகளுக்கான பணியில் திருஅவை : நினைவாற்றல் இழப்பு நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சிகிச்சை” என்ற தலைப்பில், வருகிற வியாழன் முதல் சனிக்கிழமை வரை வத்திக்கானில் நடைபெறவுள்ள மூன்று நாள்கள் அனைத்துலக கருத்தரங்கு பற்றி நிருபர் கூட்டத்தில் இச்செவ்வாயன்று விளக்கியபோது இவ்வாறு அறிவித்தார் பேராயர் Zimowski.
இக்கருத்தரங்கு குறித்து மேலும் விளக்கிய பேராயர் Zimowski, இதன் நிறைவு நாளான வருகிற சனிக்கிழமை காலையில் இதில் கலந்து கொண்ட பிரதிநிதிகள், நோயாளிகள் மற்றும் இத்திருப்பீட அவையினர் அனைவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் சேர்ந்து செபம் மற்றும் தியானத்தில் ஈடுபடுவர் எனவும் கூறினார்.
அறிவியல் ஆய்வாளர்கள், மருத்துவர்கள், திருஅவையின் நலவாழ்வுப் பணியில் உள்ளோர் என 5 கண்டங்களின் 57 நாடுகளிலிருந்து ஏறக்குறைய 700 பேர் இக்கருத்தரங்கில் கலந்து கொள்வார்கள் எனவும் பேராயர் Zimowski அறிவித்தார்.
திருப்பீட நலவாழ்வுப்பணி அவைத் தலைவர் பேராயர் Zygmunt Zimowski தலைமையிலான குழு, இக்கருத்தரங்கு குறித்து திருப்பீட பத்திரிகை அலுவலகத்தில் இச்செவ்வாயன்று மேலும் பல தகவல்களை நிருபர்களிடம் கூறியது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.