2013-11-19 15:24:38

நம்பிக்கை ஆண்டின் நிறைவுத் திருப்பலியில் எடுக்கப்படும் நிதி ஹையான் புயலில் பாதிக்கப்பட்டவர்க்கென அனுப்பப்படும்


நவ.19,2013. நம்பிக்கை ஆண்டின் நிறைவாக, வருகிற ஞாயிறு காலை 10.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிகழ்த்தும் திருப்பலியில் எடுக்கப்படும் நிதி, பிலிப்பீன்சில் ஹையான் புயலில் பாதிக்கப்பட்டவர்க்கென அனுப்பப்படும் என திருப்பீடம் அறிவித்துள்ளது.
மேலும், இத்திருப்பலி தொடங்குவதற்கு முன்னர் பலிபீட மேடையில் புனித பேதுருவின் புனிதப் பொருள்கள் வைக்கப்படும் எனவும், இத்திருப்பலியில் கத்தோலிக்க கீழை வழிபாட்டுமுறை திருஅவையின் தலைவர்களும், முதுபெரும் தந்தையரும் கலந்து கொள்வார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இத்தாலியின் சர்தீனியாத் தீவு, கடும் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவேளை, அத்தீவில் அவசரகால நிலையை அறிவித்துள்ளது இத்தாலிய அரசு.
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 2012ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி தொடங்கிய நம்பிக்கை ஆண்டை, 2013ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவுக்குக் கொண்டு வருகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.