2013-11-19 15:10:48

திருத்தந்தை பிரான்சிஸ் : தனது முதியோரை மதிக்காத நாட்டுக்கு எதிர்காலம் கிடையாது


நவ.19,2013. தனது தாத்தா பாட்டிகளை மதிக்காத ஒரு நாட்டுக்கு எதிர்காலம் கிடையாது, ஏனெனில் அடக்குமுறைகளை எதிர்நோக்கிய காலத்தில் விசுவாசத்தை பரப்பியதில் வீரத்துவமான பங்கை அவர்கள் கொண்டிருந்தனர் என்பதை அந்நாடு அடிக்கடி மறந்து போகின்றது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்செவ்வாய் காலையில் வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலி மறையுரையில், மக்கபேயர் 2ம் புத்தகத்தின் 6ம் பிரிவிலுள்ள எலயாசரின் மறைசாட்சி இறப்பு குறித்து விளக்கியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சமய மறுப்புக்கும், கிறிஸ்தவ விசுவாசத்துக்கும் இடையே எதைத் தேர்ந்து கொள்வது என்ற நிலை, வயதில் முதிர்ந்தவரான எலயாசருக்கு வந்தபோது, அவர் தன்னைப் பற்றிக் கவலைப்படுவதை விடுத்து, தனது துணிச்சலான செயல் இளையோருக்கு விட்டுச்செல்லும், எளிதில் மறக்கமுடியாத தாக்கம் குறித்தே நினைத்துச் செயல்பட்டார் எனக் கூறினார் திருத்தந்தை.
இந்த மனிதரின் கொள்கைப் பற்றுறுதி, இவரின் விசுவாசப் பற்றுறுதி குறித்தும், உண்மையான மற்றும் மேன்மையான மரபுரிமையை விட்டுச்செல்ல வேண்டுமென்ற இவரின் பொறுப்புணர்வு குறித்தும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ், முதியோரைக் கண்டுகொள்ளாத ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம், அவர்கள் கைவிடப்பட்டு வாழ்கிறார்கள் என்று சொல்வதே கொடூரமாக இருக்கின்றது எனக் கவலையுடன் கூறினார்.
முதியவர்கள் வரலாற்றைத் தங்களுக்குள் எடுத்துச் செல்கிறவர்கள், கோட்பாடுகளை நமக்குக் கொடுப்பவர்கள், விசுவாசத்தை நமக்கு அளித்து அதை மரபுரிமையாக விட்டுச் செல்பவர்கள் என்றும் உரைத்த திருத்தந்தை, முதியோர் இல்லத்தில் வாழும் வயதானவர்களை நினைத்துச் செபிப்போம் என்றும் கேட்டுக்கொண்டார்.
நமது பாட்டிகள் நமக்கு விசுவாசத்தைத் தந்தவர்கள், எனவே நமது தாத்தா பாட்டிகளுக்காகச் செபிப்போம் என்றும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.