2013-11-18 16:06:59

திருத்தந்தை பிரான்சிஸ் : ஆண்டவரே, இவ்வுலகின் சூழ்ச்சிகளிலிருந்து எம்மைக் காப்பாற்றும்


நவ.18,2013. திருஅவையை அடிக்கடித் தாக்கி கிறிஸ்தவர்கள்மீது அநீதியான சட்டங்களைப் புகுத்தும், இன்பம்தேடும் இவ்வுலக வாழ்க்கைமுறை மற்றும் இவ்வுலகப்போக்கு குறித்து விசுவாசிகள் மிகுந்த கவனமுடன் இருக்குமாறு எச்சரித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்திங்களன்று காலையில் வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலியில், இந்நாளின் முதல் வாசகமான மக்கபேயர் முதல் நூலின் பகுதியை மையமாக வைத்து மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் இவ்வாறு எச்சரித்தார்.
4ம் அந்தியோக்குஸ் எப்பிப்பான என்ற மன்னன் யூதச் சட்டங்கள் கடைப்பிடிக்கப்படுவதைத் தடைசெய்ததையடுத்து, யூதர்கள் தங்களின் கலாச்சாரத்தையும், சமய தனித்தன்மையையும் நிலைநாட்டுவதற்கு எடுத்த முயற்சிகளை விளக்கும் இப்பகுதி குறித்து விளக்கிய திருத்தந்தை, உலகின்போக்கின்படி வாழ்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து எச்சரித்தார்.
உலகப்போக்கு தீமையின் விளைவாகும் என்றும், இது நமது மரபுகளைக் கைவிடவும், கடவுளுக்கு நாம் பிரமாணிக்கமாக இருப்பதைப் பேரம்பேசவும் இட்டுச்செல்கின்றது என்றும், சமயஎதிர்ப்பு என்பது இதுதான் என்றும் கூறினார் திருத்தந்தை.
உலகமயமாக்கல் என்பது, ஒவ்வொருவரும் தங்களின் தனிப்பட்ட கலாச்சாரத்தைக் கைவிட்டு, ஒரே மனிதகுலமாக வாழ்வதல்ல, மாறாக, ஒவ்வொருவரும் தங்களின் கலாச்சாரத்தைக் தக்கவைத்துக்கொண்டு ஒன்றிணைந்து வாழ்வதே உலகமயமாக்கல் என அழைக்கப்பட வேண்டும் எனவும் கூறினார் திருத்தந்தை.
அன்றையக் காலம்போல் இன்றைய உலகிலும் இறைவனுக்கு விசுவாசமாக இருப்பதாலேயே மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்றுரைத்த திருத்தந்தை, இறைவனில் கொண்டுள்ள விசுவாசத்தைப் புறந்தள்ளி பாவம் செய்வோரும் திருந்தி வரவேண்டுமென இறைவன் காத்திருக்கிறார் என்று கூறினார்.
நம்பிக்கைக்குரியவராய் இருக்கும் இறைவன், விசுவாசமற்றவர்களாக வாழும் மக்கள் தம்மை நோக்கி ஓரடி எடுத்து வைக்கும்போது அவர்களை ஏற்று அவர் மன்னிக்கிறார் என இத்திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.