2013-11-18 16:29:38

இனப்பிரச்சனைக்கு விரைவான தீர்வு தேவை: தென்னாப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா


நவ.,18,2013. இலங்கையில் நீண்ட காலமாக இருந்துவரும் இனப்பிரச்சனைக்கான ஒரு தீர்வு விரைவாக எட்டப்பட வேண்டும் என தென்னாப்ரிக்கா கோரியுள்ளது.
போருக்குப் பின்னான காலத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தணிய வைக்கவும், பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் தென்னாப்ரிக்கா தயாராகவுள்ளது என்று அதன் அதிபர் ஜேக்கப் ஜூமா தெரிவித்துள்ளார்.
தனது நாடு மிகவும் ஆழமான மற்றும் சிக்கலான மோதல்களைச் சந்தித்துள்ளது என்றும், பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு வழிமுறையைக் கையாண்டு பிரச்சனைகளைத் தீர்த்துள்ளதாக இலங்கை அரசுத்தலைவருடன் கூட்டாக நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் ஜேக்கப் ஜூமா சுட்டிக்காட்டியுள்ளார்.
இனப்பிரச்சனைக்கான தீர்வுத் தொடர்பில் இருநாடுகளுக்கும் இடையே தற்போது உயர்மட்டத்தில் பேச்சுகள் நடைபெற்று வருவதாகவும் ஜூமா தெரிவித்தார்.
இதற்கிடையே, இலங்கையிலும் அதற்கான வழிமுறைகள் தொடங்கியுள்ளன என்றும், நாட்டின் அரசியல் அமைப்பிற்கு இயைந்தே, நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் எனவும் கூறியுள்ளார் இலங்கை அரசுத்தலைவர் மஹிந்த ராஜபக்ஷ.
மேலும், இலங்கையில் இனப்பிரச்சனைக்கான தீர்வு குறித்து தென்னாப்ரிக்கா காட்டும் ஆர்வம் தமது தரப்பில் கவனத்தில் எடுக்கப்பட்டு, வரும் நாட்களில் பரிசீலிக்கப்படும் எனவும், நீண்ட காலமாக இந்த விடயம் தொடர்பில் ஈடுபட்டுவரும் இந்தியாவுடனும் மற்ற நாடுகளுடனும் இந்த முயற்சி ஆலோசிக்கப்படும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஒரு செய்திக் குறிப்பு கூறுகிறது.

ஆதாரம் : BBC








All the contents on this site are copyrighted ©.