2013-11-16 15:11:20

திருத்தந்தை பிரான்சிஸ் : இறைவனின் ஒரே பலவீனம், மனிதரின் செபமே


நவ.16,2103. இறைவன் தம் மக்களைப் பாதுகாப்பதில் அஞ்சா நெஞ்சம்கொண்ட போர்வீரனைப் போல் செயல்படுகிறார், அவரது மக்களின் செபம் அவரின் ஒரே பலவீனம் என, இச்சனிக்கிழமையன்று காலையில் வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தம் மக்களை மீட்பதில் ஆண்டவரின் பலம், அவரது மக்கள் செபத்தில் கண்டடையக்கூடிய பலம் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தனக்கு நீதி வேண்டுமென நேர்மையற்ற நடுவனுக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருந்த கைம்பெண் பற்றிய உவமையில் இயேசு, மனந்தளராமல் இறைவனிடம் மன்றாட வேண்டுமென்பதை வலியுறுத்துகிறார். இந்த உவமை குறித்த இந்நாளைய நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து மறையுரையற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், இரவும் பகலும் தம்மிடம் மன்றாடும் தேர்ந்துகொண்டவர்களுக்கு இறைவன் நீதி வழங்குகிறார் மற்றும் வழங்குவார் என்று சொன்னார்.
இறைவன் மோசேயை அழைத்தபோது, தம் மக்களின் அழுகுரலைத் தான் கேட்டதாகச் சொன்னார் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், இந்நாளைய முதல் வாசகத்திலும் விண்ணகம், அஞ்சா நெஞ்சம் கொண்ட போர்வீரனைப் போல் உள்ளது என்று சொல்லப்பட்டுள்ளது, இறைவன் தம் மக்களின் பாதுகாப்புக்காகச் செயல்படும்போது இத்தகைய போர்வீரனைப் போல் செயல்பட்டு தம் மக்களைப் பாதுகாக்கிறார் என்றார்.
நம் ஆண்டவர் தம் மக்களின் செபங்களைக் கேட்கும்போது அவர் தமது இதயத்தில் தாம் தேர்ந்துகொண்டவர்கள் துன்புறுவதாக உணருகிறார் மற்றும் அவர்களை மிகவும் வல்லமையுள்ள வழியில் காப்பாற்றுகிறார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இறைவனின் பலம் இவ்வாறு இருக்கும்போது நமது பலம் என்ன என்ற கேள்வியையும் எழுப்பிய திருத்தந்தை, இந்தக் கைம்பெண் போன்று இறைவனின் இதயத்தை ஒவ்வொரு நாளும் தட்ட வேண்டும், அவரிடம் செபிக்க வேண்டும், அவரிடம் கேட்க வேண்டும் என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.