2013-11-16 15:20:03

சாலை விபத்துக்களில் இறப்பவர்களை நினைவுகூரும் உலக நாள் நவம்பர் மூன்றாம் ஞாயிறு


நவ.16,2103. 2015ம் ஆண்டுக்குள் மில்லென்யம் வளர்ச்சித் திட்ட இலக்குகளை எட்டுவதற்கு அனைத்துலக சமுதாயம் முயற்சித்துவரும் இவ்வேளையில், வருங்கால வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக, சாலை பாதுகாப்புகளுக்கு மேலும் தெளிவான நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன் கேட்டுக்கொண்டுள்ளார்.
நவம்பர் 17, இஞ்ஞாயிறன்று சாலை விபத்துக்களில் இறப்பவர்களை நினைவுகூரும் உலக நாள் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன், ஒவ்வோர் ஆண்டும் சாலை விபத்துக்களால் உலகில் 12 கோடியே 40 இலட்சம் பேர் இறக்கின்றனர்; மேலும் ஏறக்குறைய 5 கோடிப் பேர் காயமடைகின்றனர்; இவர்களில் சிலர் நிரந்தரமாகவே மாற்றுத்திறனாளிகளாக ஆகிவிடுகின்றனர் என்ற உண்மையை இந்நாளில் அனைவரின் கவனத்துக்குக் கொண்டுவருவதாகத் தெரிவித்துள்ளார்.
பாதசாரிகள், மிதிவண்டி ஓட்டுனர்கள், இன்னும் சாலைகளைப் பயன்படுத்துவோர் அனைவருக்கும் பாதுகாப்பான நடைபாதைகளை அமைக்கவும், குடிகார ஓட்டுனர்களையும், அதிவேக ஓட்டுனர்களையும், வாகனம் ஓட்டும்போதே கைபேசிகளைப் பயன்படுத்துவோரையும், வாகனத்தில் பெல்ட் அணியாமல் செல்பவர்களையும் இத்தகையவர்களைத் தண்டிப்பதற்கு கடுமையான சட்டங்கள் தேவை எனவும் வலியுறுத்தியுள்ளார் பான் கி மூன்.
சாலை விளக்குகள், வாகன நிறுத்த விளக்குகள் போன்றவை ஒழுங்குபடுத்தப்படவும் பான் கி மூன் அச்செய்தியில் அழைப்புவிடுத்துள்ளார்.
ஆண்டுதோறும் நவம்பர் மாதம் மூன்றாம் ஞாயிறு இந்நினைவு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகில் சாலை விபத்துக்களில் தினமும் பலியாகுவோர், காயமடைவோர் மற்றும் அவர்களின் குடும்பங்கள் இந்நாளில் நினைவுகூரப்படுகின்றனர். அத்துடன், இப்படிப் பலியோகுவோருக்கு உதவும் காவல்துறை, அவசர மருத்துவ வாகனங்கள் மற்றும் மருத்துவத் துறையினரும் இந்நாளில் நன்றியோடு நினைவுகூரப்படுகின்றனர்.
இந்தியாவில் 2011ம் ஆண்டில் மட்டும் 44 இலட்சம் சாலை விபத்துக்கள் ஏற்பட்டதாக ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது.
தமிழகத்தில் நடக்கும் சாலை விபத்துகளால் இறப்பவர்களின் எண்ணிக்கை கடந்த 11 ஆண்டுகளில் 60 விழுக்காடாக அதிகரித்துள்ளது. 2001ம் ஆண்டில் 9,571 ஆக இருந்த எண்ணிக்கை 2012ம் ஆண்டில் 16,175 ஆக அதிகரித்தது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.