2013-11-16 15:23:10

ஒரு குழந்தை திட்டத்தை தளர்த்த சீனா முடிவு


நவ.16,2103. சீனாவில், மனித உரிமை மீறல்களை அகற்ற முயற்சிக்காமல், அந்நாட்டில் கடந்த 40 ஆண்டுகளாக அமலில் இருக்கும், ஒரு குழந்தை திட்டத்தைத் தளர்த்தத் திட்டமிடுவது சரியான வழிகாட்டுதலாக அமையாது என ஒரு முக்கிய பெண்ணுரிமை ஆர்வலர் கருத்து தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் ஆணிவேரே கட்டாயப்படுத்துவதாக உள்ளது என CNA செய்தி நிறுவனத்திடம் தெரிவித்த எல்லைகளற்ற பெண்ணுரிமை அமைப்பின் தலைவர் Reggie Littlejohn, எத்தனை குழந்தைகளை ஒருவர் கொண்டிருக்கலாம் என்பதை அரசே தீர்மானிக்கின்றது எனக் கூறினார்.
சீனாவில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த, கடந்த 1970ம் ஆண்டில், ஒரு குழந்தை திட்டத்தை அந்நாட்டு அரசு அமல்படுத்தியது.
இதன்படி, ஒரு தம்பதி ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். சீனாவின் இந்த முடிவு காரணமாக, தற்போது அந்நாட்டில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாகி, பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அண்மையில் அதிபர் ஜி ஜிங்பிங் தலைமையில் கூடிய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்தில் ஒரு குழந்தை திட்டத்தைத் தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஒரு குழந்தை திட்டத்தின்படி பிறந்தவர்கள், தற்போது இரு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆதாரம் : CNA







All the contents on this site are copyrighted ©.