2013-11-15 15:28:07

பிலிப்பீன்சில் அனாதைகளாகியுள்ள சிறார் பாலியல் வியாபாரத்துக்குப் பயன்படுத்தப்படும் அபாயம்


நவ.15,2013. பிலிப்பீன்சில் இப்புயலால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள Leyte மாநிலத்தில் ஆயிரக்கணக்கான சிறார் அனாதைகளாகியுள்ளனர் எனவும், மனித வியாபாரிகள் இச்சிறாரை தங்கள் வியாபாரத்துக்காக அபகரித்து வருகின்றனர் எனவும், இச்சிறார் இந்த மனித வியாபாரிகளிடமிருந்து உடனடியாகக் காப்பாற்றப்பட வேண்டுமெனவும் புனித கொலும்பானோ மறைபோதக அருள்பணி Shay Cullen கேட்டுக்கொண்டுள்ளார்.
பிலிப்பீன்சில் 1969ம் ஆண்டு முதல் சமூக மற்றும் மேய்ப்புப்பணியாற்றிவரும், குறிப்பாக, பாலியல் பயன்பாட்டுக்குப் பலியாகும் சிறார் மத்தியில் பணியாற்றிவரும் அருள்பணி Cullen, இப்புயலில் அனைவரையும் இழந்து தவிக்கும் சிறாரைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில், மனித வியாபாரிகள், அவர்களைக் கடத்தி, சிறார் பாலியல் வியாபரிகளிடம் விற்கின்றனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
சட்டத்துக்குப் புறம்பே தத்து எடுப்பதற்கு இச்சிறாரை விற்பதன்மூலம் மனித வியாபாரிகள் பெருமளவில் பணம் சம்பாதிக்கின்றனர், அதையும்விட மோசமாக, இச்சிறாரை, பாலியல் தொழில் உலகுக்கு அறிமுகப்படுத்தி அவர்களை, பாலியல் பயன்பாட்டுக்கு அடிமைகளாக ஆக்குகின்றனர் எனவும் கொலும்பானோ அருள்பணியாளர் கவலை தெரிவித்தார்.
இதற்கிடையே, சிறார் எதிர்கொள்ளும் இந்த ஆபத்து குறித்து பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் அறிந்து அதில் கவனம் செலுத்தி வருகின்றனர் என பீதெஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.