2013-11-15 15:28:29

அமேசான் பருவமழைக்காடுகளின் அழிவு ஓராண்டில் 28 விழுக்காடு அதிகரிப்பு


நவ.15,2013. அமேசான் பருவமழைக்காடுகளின் அழிவு சில ஆண்டுகளாகக் குறைந்துவந்தவேளை, கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்டுக்கும் இவ்வாண்டின் கடந்த ஜூலைக்கும் இடைப்பட்ட காலத்தில் இக்காடுகளின் அழிவு 28 விழுக்காடு அதிகரித்திருப்பதாக பிரேசில் அரசு கூறுகிறது.
இந்தக் காலக்கட்டத்தில் 5,843 சதுர கிலோ மீட்டர் அளவு காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக அறிவித்த பிரேசிலின் சுற்றுச்சூழல் அமைச்சர் Izabella Teixeira, இதற்கு முந்தைய 12 மாதங்களில் இந்த அழிவு 4,571 சதுர கிலோ மீட்டராக இருந்தது எனத் தெரிவித்தார்.
அமேசான் பருவமழைக்காடுகளின் அழிவு 2009ம் ஆண்டிலிருந்து குறைய ஆரம்பித்தது, ஆனால், இப்பொழுது மீண்டும் இவ்வழிவு அதிகரிக்கத் தொடங்கியிருப்பதற்கு, பிரேசிலின் சர்ச்சைக்குரிய காடுகள் பாதுகாப்பு சீர்திருத்தச் சட்டமே காரணமென, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குறைகூறுகின்றனர்.
அமேசான் மழைக்காடுகள் என்பது, தென் அமெரிக்காவின் அமேசான் ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள ஒரு பெரிய மழைக்காடு ஆகும். உலகில் வாழும் உயிரின வகைகளுள் பத்தில் ஒரு பங்கு அமேசான் மழைக்காடுகளில் வாழ்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதுவே உலகின் மிகப் பெரிய உயிரினத் தொகுப்பாகும்.

ஆதாரம் : BBC







All the contents on this site are copyrighted ©.