2013-11-14 16:10:58

திருத்தந்தை பிரான்சிஸ் : குடும்பத்துக்கு ஆதரவாக தனிநபர்களும் நிறுவனங்களும் தங்களை அர்ப்பணிக்க வேண்டும்


நவ.14,2013. இத்தாலியின் ஒவ்வொரு குடிமகனும் இவ்வுலகின் தங்கள் குடும்ப வாழ்வின் மூலங்களை ஆராய்வதோடு, என்றென்றும் புதுமையானதாக, அதேவேளை குணப்படுத்தும் வல்லமையுள்ள நற்செய்தி வார்த்தைகளை அனைவருக்கும் எடுத்துரைக்க முன்வருமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தான் திருத்தந்தையாகத் தலைமைப்பணியை ஏற்றபின் முதன்முறையாக இத்தாலிய அரசுத்தலைவர் மாளிகைக்கு இவ்வியாழனன்று அதிகாரப்பூர்வப் பயணத்தை மேற்கொண்டு இத்தாலிய அரசுத்தலைவர் ஜார்ஜோ நாப்போலித்தானோ அவர்களைச் சந்தித்த நிகழ்வில் உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், குடும்பத்துக்கு ஆதரவாக தனிநபர்களும் நிறுவனங்களும் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் மற்றும் பொருளாதார நெருக்கடியின் பின்விளைவுகளால் ஏற்பட்டுள்ள வேலைவாய்ப்பின்மையை அகற்ற முயற்சிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
வேலையில்லாதவர்க்கு உதவ வேண்டுமெனவும் கூறிய திருத்தந்தை, பொது நலனுக்கும், மனிதகுலத்துக்கும் சேவையாற்றும் நோக்கில் இத்தாலிக்கும் திருப்பீடத்துக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தங்கள், ஒப்பந்தத் திருத்தங்கள் ஆகியவை பற்றியும் குறிப்பிட்டார்.
இறைஇரக்கத்தின் சாட்சிகளாகவும், வருங்கால நம்பிக்கைக்கான தாராளமனத்தை ஊக்குவிப்பதாகவும் இருக்கவேண்டியது திருஅவையின் முதல் கடமை என்பதை தனது உரையில் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, நீதியும் மனிதாபிமானமும் நிறைந்த உலகைக் கட்டி எழுப்புவதில் அனைவரும் ஒத்துழைக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்.
மேலும், இத்தாலிய அரசுத்தலைவர் மாளிகையில் பணிபுரியும் அனைவரின் குடும்பத்தினரையும் இவ்வியாழனன்று சந்தித்து ஒரு சிறு உரையும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
1870ம் ஆண்டுக்குப் பின்னர், இத்தாலிய அரசுத்தலைவரின் Quirinale மாளிகைக்குச் சென்ற
ஆறாவது திருத்தந்தையாக உள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். ஒரு நாட்டின் தலைவராக, 5 அல்லது 6 வாகனங்கள் அணிவகுத்துச் செல்லும் வழக்கமான முறையைக் கைவிட்டு தனது காரில் போக்குவரத்து நெரிசலில் இவ்வியாழனன்று Quirinale மாளிகை சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 2008ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி Quirinale மாளிகை சென்று அரசுத்தலைவர் ஜார்ஜோ நாப்போலித்தானோ அவர்களைச் சந்தித்தார். அதற்கு முன்னர், 2005ம் ஆண்டு ஜூன் 24ம் தேதியன்று Quirinale மாளிகையில் அரசுத்தலைவர் Carlo Azeglio Ciampi அவர்களையும் சந்தித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.