2013-11-14 16:11:07

திருத்தந்தை பிரான்சிஸ் : அன்னைமரியா ஒவ்வொரு நாளும் செய்தி அனுப்பும் தபால்நிலையத் தலைவர் அல்ல


நவ.14,2013. ஒவ்வொரு நாளும் செய்தி அனுப்பும் தபால்நிலையத் தலைவர் அல்ல நம் அன்னைமரியா, மாறாக, அவர் நம் ஒவ்வொருவரின் தாயாகவும், நம்மை அன்புகூர்பவராகவும் இருக்கிறார் என, இவ்வியாழக்கிழமை காலையில் வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தூய ஆவியின் ஞானத்தில் வாழும் உண்மையான கிறிஸ்தவரின், ஓர் ஆன்மீக மனிதரின் ஆன்மாவின் நிலையை விளக்கும் சாலமோனின் ஞானம் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்நாளைய திருப்பலியின் முதல் வாசகத்தை மையமாக வைத்து மறையுரையற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், இந்த ஞானம், கிறிஸ்தவரை அறிவு, தூய்மை, தனித்தன்மை, நுண்மை, கூர்மை போன்ற இயல்புகளுடன் முன்நோக்கி நடக்க உதவுகின்றது என்று கூறினார்.
கடவுளின் ஆவியோடு வாழ்வில் தொடரும் இந்தப் பயணம், கடவுளின் விருப்பத்துக்கு ஏற்ப நிதானித்து தீர்மானங்கள் எடுக்க உதவுகின்றது, இந்த ஆவி எப்பொழுதும் அமைதியைத் தருகின்றது, இந்த ஆவி அமைதியின், அன்பின் மற்றும் சகோதரத்துவத்தின் ஆவி என்றும் விளக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இந்நாளைய நற்செய்தி வாசகத்தை வைத்தும் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், கடவுளின் ஞானத்துக்கு முரணான மற்றோர் இயல்பையும் நாம் நம்மில் காண்கிறோம், அது ஆர்வக்கோளாறு இயல்பு என்றும், இந்த இயல்பு குழப்பத்தை உருவாக்கி அமைதியைக் கொணரும் ஞானத்தின் இயல்பிலிருந்து ஒருவரை ஒதுக்கி வைக்கின்றது என்றும் கூறினார்.
நமது வருங்காலம் பற்றியும், பிற காரியங்கள் பற்றியும், அனைத்தையுமே முன்கூட்டியே அறியும் ஆவலில் கடவுள் திட்டத்தின் முதலாளிகளாக மாற விரும்புகிறோம், இந்த ஆர்வக்கோளாறு, தூய ஆவி, நற்செய்தி, அமைதி, ஞானம், கடவுளின் மாட்சிமை, கடவுளின் அழகு ஆகியவற்றிலிருந்து நம்மைத் தூர வைக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இறையாட்சி நம் கவனத்தைக் கவர்வது போல் வராது, ஆனால் ஞானத்தால் வரும், இந்த இறையாட்சி உங்கள் மத்தியில் உள்ளது என இயேசு கூறுகிறார் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், இந்த இறையாட்சியை இவ்வுலகப்போக்கிலும், நூதனங்களிலும் தேடாமல், தூய ஆவியின் வழிநடத்தலில் தேடுவோம் என மறையுரையில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.