2013-11-14 15:48:39

கற்றனைத்தூறும்..... காமன்வெல்த் நாடுகள்


காமன்வெல்த் நாடுகள் அல்லது பொதுநலவாய நாடுகள் என்பவை பிரித்தானியப் பேரரசின் காலனி ஆதிக்கத்தின்கீழ் இருந்த 53 சுதந்திர நாடுகளின் கூட்டமைப்பாகும். பிரித்தானியப் பேரரசு தனது காலனி நாடுகளுக்குச் சுதந்திரம் அளித்த பின்னர் காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பு, 1949ம் ஆண்டில் இலண்டன் அறிவிப்பின்மூலம் உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பின் தலைவர் இங்கிலாந்து அரசி 2ம் எலிசபெத் ஆவார். இவர், காமன்வெல்த் அமைப்பிலுள்ள 16 முடியாட்சி நாடுகளுக்கும் தலைவராவார். மற்ற காமன்வெல்த் உறுப்பு நாடுகளில் 32 குடியரசுகளும், 5 முடியரசுகளும் உள்ளன. காமன்வெல்த் நாடுகள் பொதுவாக ஒன்றுக்கொன்று சட்டரீதியாக எந்தப் பிணைப்பையும் கொண்டிருக்கவில்லை. ஆனால், மொழி, வரலாறு, கலாச்சாரம், இன்னும், மக்களாட்சி, மனித உரிமைகள், ஆளும் சட்டம் போன்றவற்றின் விழுமியங்களைப் பகிர்ந்து கொள்ளல் ஆகியவற்றில் ஒன்றிணைந்திருக்கின்றன. இந்த விழுமியங்கள் காமன்வெல்த் அரசியல்அமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. மேலும், இவை நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் காமன்வெல்த் விளையாட்டுக்களால் ஊக்குவிக்கப்படுகின்றன. காமன்வெல்த் நாடுகள், உலகின் மொத்தப் பகுதியில் ஏறக்குறைய நான்கில் ஒரு பாகத்தை, அதாவது 29,958,050 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளன. இந்நாடுகளின் மொத்த மக்கள்தொகை 224 கோடியே 50 இலட்சமாகும். அதாவது உலக மக்கள் தொகையில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதியாகும். காமன்வெல்த் உச்சி மாநாடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பல்வேறு உறுப்பு நாடுகளில் நடைபெறுகின்றது. அந்த மாநாட்டை நடத்தும் அந்த நாட்டின் அரசுத்தலைவர் அல்லது பிரதமர் அவ்வமைப்பின் அலுவலகத் தலைவராக அடுத்த இரு ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார். மேலும், ஆப்ரிக்காவின் காம்பியா நாடு, காமன்வெல்த் அமைப்பில் 48 ஆண்டுகள் உறுப்பினராக இருந்த பின்னர், இந்த அமைப்பிலிருந்து விலகுவதாக 2013ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி அறிவித்தது. இன்னும், மாலத்தீவில், உரிய நேரத்தில், தேர்தல் நடத்தாததால், அந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் மீறப்பட்டுள்ளது என்று சொல்லி, அந்நாட்டை, காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்குவதாக, இந்த அமைப்பின் CMAG என்ற வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்திலான செயற்குழு இப்புதனன்று அறிவித்தது. இதையடுத்து, இவ்வெள்ளியன்று துவங்கும், காமன்வெல்த் மாநாட்டில் மாலத்தீவு பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆதாரம் : இணையத்திலிருந்து








All the contents on this site are copyrighted ©.