2013-11-14 16:12:03

உலகில் நிறைய வளங்கள் இருந்தும், சத்தான மற்றும் நலமான உணவுகள் பலருக்கு கிடைக்காதது வெட்கத்துக்குரியது, பான் கி மூன்


நவ.14,2013. நீரழிவு நோய், உலகில் எல்லாப் பகுதிகளிலும் இளையோர், ஏழைகள் என எல்லா வயதினரையும் பாதித்துவரும்வேளை, ஏறக்குறைய 35 கோடிப் பேர் இந்நோயுடன் வாழ்ந்து வருகின்றனர் என, ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன் கூறியுள்ளார்.
நவம்பர் 14, இவ்வியாழனன்று கடைப்பிடிக்கப்பட்ட, அனைத்துலக நீரழிவு நோய் விழிப்புணர்வு நாளையொட்டி செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன், இந்நோய் தனிப்பட்டவரின் மற்றும் பொது சமூகத்தின் பிரச்சனையாக இருப்பதால், இந்நோயைத் தடுத்து நிறுத்தவும், கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு வலியுறுத்தியுள்ளார்.
நீரழிவு நோய் தங்களுக்கு இருப்பதாக பலர் அறியாமலே இருக்கின்றனர் என்றும், காலம்கடந்து இந்நோயின் பாதிப்பைக் கண்டறிவது கடும் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றது என்றும், இந்நோய்க்கான சிகிச்சை எடுக்காததால், நீரழிவு நோயாளிகள், மாரடைப்பு, சிறுநீரகச் செயலிழப்பு, stroke ஆகியவற்றால் குறைந்த வயதிலே இறக்கின்றனர் என்றும் அவரின் செய்தி கூறுகின்றது.
உலகில் நிறைய வளங்கள் இருந்தும், சத்தான மற்றும் நலமான உணவுகள் பலருக்கு கிடைக்காதது வெட்கத்துக்குரியது என்று கூறியுள்ள ஐ.நா.பொதுச்செயலர், நீரழிவு நோயாளிகளின் வாழ்வைப் பாதுகாக்கும் இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டு ஏறக்குறைய நூறு ஆண்டுகள் ஆகியும், இம்மருந்தைப் பெறுவதற்கு வசதியின்றி, உலகில் இன்றும் பலர் இந்நோயால் இறக்கின்றனர் என்று தனது கவலையை வெளியிட்டுள்ளார்.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.