2013-11-14 16:11:55

அருள்பணி பிரகாஷ் சே.ச. அவர்களுக்கு அன்னை தெரேசா விருது


நவ.14,2013. அனைத்துலக அன்னை தெரேசா சமூக நீதி விருது, இயேசு சபை அருள்பணி செத்ரிக் பிரகாஷ் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அருள்பணி செத்ரிக் பிரகாஷ், இவ்வுலகில் கடும் ஏழ்மையில் இருப்போர், கைவிடப்பட்டு இறக்கும் நிலையில் உள்ளோர், அன்புகூரப்படாதவர், கவனிக்கப்படாதவர் ஆகியோர்மீது முழுவதும் கருணைகாட்டி வரையறையின்றி உதவியதைப் பாராட்டும் விதத்தில் இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விருதைப் பெற்று கருத்து தெரிவித்த அருள்பணி செத்ரிக், நமது சிறிய உலகை மாற்றவும், அன்பு, மாண்பு,. நீதி மற்றும் அமைதிக்காகப் பசியாகவும் தாகமாகவும் இருக்கும் மக்களுக்கு, மேலும் அதிகமான தெளிவான வழிகளில் செயலாற்றவும் இவ்விருது ஒரு சவாலாக இருக்கின்றது என்று தெரிவித்தார்.
குஜராத் மாநிலத்தின் அகமதபாத்திலுள்ள பிரசாந்த் மனித உரிமைகள், நீதி, அமைதி மையத்தின் இயக்குனராகிய இயேசு சபை அருள்பணி செத்ரிக் பிரகாஷ், இந்தியாவில் மனித உரிமைகள் காக்கப்படுவதற்காக, பல ஆண்டுகளாகப் பணி செய்து வருகிறார். குறிப்பாக, 2002ம் ஆண்டில் குஜராத்தில் இடம்பெற்ற இந்து-முஸ்லீம் பாகுபாட்டு வன்முறையில் பலியானவர்களுக்கு இவரது பிரசாந்த் மையம் உதவி செய்துள்ளது.
அன்னை தெரேசாவின் மரபுவழிகளைப் பின்பற்றிச் செயல்படுபவர்க்கென, இந்த அனைத்துலக அன்னை தெரேசா சமூக நீதி விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இதனை Harmony Foundation என்ற அமைப்பு 2005ம் ஆண்டில் உருவாக்கியது.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.