2013-11-13 14:47:57

நவ.14,2013 கற்றனைத்தூறும்... இந்திய குழந்தைகள் தினம், நவம்பர் 14


சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராகப் பதவி வகித்தவர் ஜவஹர்லால் நேரு. இவர் குழந்தைகள்மீது மிகுந்த அன்பும், பாசமும் கொண்டிருந்தார். அதேபோல் குழந்தைகளும் நேருவின்மீது பற்று வைத்திருந்தனர். மேலும், வருங்கால இந்தியா, இன்றையக் குழந்தைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது, இன்றையக் குழந்தைகளைச் சார்ந்து உள்ளது என்றும் அவர் நம்பினார். அதனால் அவர் எப்பொழுதும் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அவர் குழந்தைகள் மீதும், ரோஜா மலர்கள் மீதும் அளவு கடந்த பற்றுதலைக் கொண்டிருந்தார். நேருவின் ஆட்சியின்போது இந்தியா முழுவதும் குழந்தைகள் மற்றும் இளையோர் நலம், அவர்களின் கல்வி, முன்னேற்றம் குறித்து பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் தொழிற்நுட்ப கல்லூரிகளும், எய்ம்ஸ் போன்ற பன்னாட்டுத் தரத்திலான உயர்கல்வி நிறுவனங்களும் இந்தியாவில் துவக்கப்பட்டன. நேரு, தனது அலுவலகப் பணிகளுக்கு மத்தியில் குழந்தைகளைச் சந்தித்து அவர்களுடன் உரையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நேருவும் குழந்தைகளால், நேரு மாமா என, செல்லமாக அழைக்கப்பட்டார். இதனால் பண்டித ஜவஹர்லால் நேரு பிறந்த தினமான நவம்பர் 14ம் தேதி இந்தியாவில் தேசிய குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. பண்டித ஜவஹர்லால் நேரு, 1889ம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள அலகாபாத்தில் பிறந்தார். இங்கிலாந்தில் உயர் கல்வியை முடித்துவிட்டு சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தியுடன் துணை நின்றார். இந்தியா சுதந்திரம் பெற்றதும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஆனார். இந்திய குழந்தைகள் தினம் வெறும் கொண்டாட்டத்தோடு மட்டும் நின்றுவிடக் கூடாது. சொட்டுமருந்து கொடுப்பது, சிறார் கல்வி, சிறார் பராமரிப்பு போன்ற விடயங்கள் பற்றி பெற்றோர்களுக்கு எடுத்துக் கூறுவது, குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பது, பாலியல் வன்முறைகள், பிச்சை எடுப்பது உட்பட சமூக விரோதிகளால் பல விதங்களில் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு உரிய நீதி மற்றும் ஆதரவு கிடைக்க வழி செய்வது போன்ற பல விடயங்களிலும் அரசியல்வாதிகளையும், அரசு அலுவலர்களையும் பெரிதும் நம்பிக்கொண்டிருக்காமல் பொது மக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் மூலமாகவோ, தனிநபராகவோ உதவி செய்ய முன்வரவேண்டும்.

ஆதாரம் : இணையதளம்








All the contents on this site are copyrighted ©.