2013-11-13 14:40:54

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


நவ.,13,2013. உரோம் நகரில் இவ்வாரம் துவங்கியதிலிருந்தே மழைத் தூறிக்கொண்டேயிருக்க, இப்புதன் திருத்தந்தையின் பொது மறைபோதகம் தூய பேதுரு வளாகத்தில் இருக்குமா அல்லது உள்ளரங்கிற்கு மாற்றப்படுமா? அப்படி மாற்றப்பட்டால், இவ்வளவு பெரிய மக்கள் எண்ணிக்கையை எவ்வாறு சமாளிக்கப்போகிறோம் என்ற கேள்வி பலர் மனதில் எழுந்து கொண்டிருந்தது. ஆனால் அதற்கு எவ்வித வாய்ப்பும் அளிக்காமல், காலையில் மேகங்கள் கலைந்து செல்ல, பிரகாசமான சூரிய ஒளியிலும், இதமான வெப்பத்திலும் திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம் திறந்தவெளியிலேயே இடம்பெற்றது. கத்தோலிக்கர்களின் விசுவாச அறிக்கை குறித்து தன் புதன் பொது மறைபோதகங்களில் தொடர்ந்து கருத்துக்களை வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று நம் விசுவாச அறிக்கையின் ஒரு பகுதியான 'பாவ மன்னிப்புக்கான ஒரே திருமுழுக்கையும் ஏற்றுக்கொள்கிறேன்' என்பது குறித்து தன்கருத்துக்களை வழங்கினார்.
விசுவாச அறிக்கை குறித்த நம் மறைக்கல்விப்போதனையின் தொடர்ச்சியாக இன்று திருமுழுக்கு திருவருட்சாதனம் குறித்து நோக்குவோம். ஒவ்வொரு ஞாயிறும் நாம் திருப்பலியில் விசுவாச அறிக்கையிடும்போது, 'பாவமன்னிப்புக்கான ஒரே திருமுழுக்கை விசுவசிக்கிறேன்' என செபிக்கிறோம். திருமுழுக்கு குறித்த இந்த விசுவாச அறிக்கையின் ஒவ்வொரு வார்த்தையையும் நோக்குவோம். 'விசுவசிக்கிறேன்' என்ற பயபக்தியுடன்கூடிய இந்த அறிக்கையிடுதல் திருமுழுக்கின் முக்கியத்துவத்தைக் கோடிட்டு காட்டுவதோடு, இறைவனின் குழந்தைகள் என்ற நம் தனித்தன்மையையும் உறுதிப்படுத்துகின்றது.
இத்திருவருட்சாதனத்தில், நம் பாவங்களுக்கான மன்னிப்புடன் தொடர்புடையதாக உள்ளது நம் விசுவாசம். நாம் நம் பாவங்களை அறிக்கையிடும்போது, நம் திருமுழுக்குத் தனித்தன்மையை புதுப்பிப்பதோடு பலப்படுத்தவும் செய்கிறோம். ஒப்புரவு அருட்சாதனத்தால் ஊட்டம்பெறும் மனமாற்றத்தின் வாழ்வுப்பயணத்தை நோக்கிய துவக்கமே திருமுழுக்காகும். ‘ஒரே திருமுழுக்கு’ என அறிக்கையிடுகிறோம். திருமுழுக்கு என்ற வார்த்தை 'மூழ்குதல்' என்ற அர்த்தத்தை கொண்டுள்ளது. திருமுழுக்கு எனும் திருவருட்சாதனம் வழியாக நாம், இயேசுவின் மரணத்தில் ஆன்மீகமுறையில் மூழ்கடிக்கப்பட்டு, ஒரு புதிய படைப்பாக இயேசுவோடு இணைந்து உயிர்த்தெழுகிறோம். தண்ணீர் மற்றும் தூயஆவி வழியாக புதுவாழ்வளிக்கப்படுவதுடன், பாவமெனும் இருளை விரட்டியடிக்கும் அருளால் நாம் ஒளிர்விக்கப்படுகிறோம். 'பாவ மன்னிப்பிற்கான' என்ற பதத்தை நாம் உரைக்கிறோம். ஆம். திருமுழுக்கு நம் சென்மப்பாவத்தையும் தனிப்பட்ட பாவங்களையும் மன்னிக்கிறது. புதிய வாழ்வுக்கான கதவு திறக்கப்பட்டு இறைஇரக்கம் நம் வாழ்வில் புகுகின்றது. ஆனால் மனித பலவீனம் என்பது நம்முடனேயே தங்கியிருக்கின்றது. நாம் தாழ்ச்சிநிறை உள்ளத்துடன் நம் பாவங்களை அறிக்கையிடவேண்டும் என திருஅவை நமக்குக் கற்பிக்கின்றது. ஏனெனில், அமைதியற்ற நம் இதயங்கள், பாவமன்னிப்பில் மட்டுமே, அதாவது, பெறுவதிலும் கொடுப்பதிலும் மட்டுமே, மனஅமைதியையும் மகிழ்வையும் கண்டுகொள்கின்றன.
இவ்வாறு தன் புதன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.