2013-11-13 15:00:48

தமாஸ்கில் வன்முறைத் தாக்குதலுக்கு அப்பாவிச் சிறார் பலி, திருத்தந்தை பிரான்சிஸ் கவலை


நவ.13,2013. சிரியாவின் தமாஸ்கு நகரில் சிறுபீரங்கிக் குண்டுவீச்சுக்களின் தாக்குதலுக்குப் பள்ளிச் சிறாரும், வாகன ஓட்டுனரும் பலியாகியிருப்பது மற்றும் சில சிறார் காயமடைந்திருப்பது குறித்த தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இப்புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் இதனை வெளியிட்ட திருத்தந்தை, இத்தகைய துன்ப நிகழ்வுகள் ஒருபோதும் நிகழக் கூடாது எனச் செபிப்போம் எனவும் கூறிய அதேவேளை, பிலிப்பீன்சில் கடும் புயலால் பாதிக்கப்பட்டுள்ள நம் சகோதர சகோதரிகளுக்காகச் செபித்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வோம் எனவும் கேட்டுக்கொண்டார்.
இவை எதிர்த்துப் போராடுவதற்கான உண்மையான போராட்டங்கள், இவை மரணத்துக்காக அல்ல, ஆனால் வாழ்வுக்காக என்றும் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணிகளிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடந்த சில நாள்களாக சிரியாவின் தமாஸ்கு நகர்ப் பகுதி ஆயுதம் தாங்கிய புரட்சியாளர்களின் கடும் பீரங்கிக் குண்டுவீச்சுக்களின் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகிறது. தமாஸ்கின் அல்-காசா மாவட்டத்திலுள்ள புனித ஜான் தமாசின் கிறிஸ்தவ ஆரம்பப் பள்ளியில் இத்திங்களன்று நடத்தப்பட்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் 5 சிறார் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 27 சிறார் காயமடைந்துள்ளனர்.
மேலும், தமாஸ்கின் புறநகர்ப் பகுதியில் கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் Bab Toumaல் பள்ளி வாகனம் தாக்கப்பட்டதில் 5 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இதே பகுதியில் கடந்த சில நாள்களில் இன்னும் சில வன்முறைத் தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.