2013-11-13 15:12:46

காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கை விலக வேண்டும், மனித உரிமை ஆர்வலர்கள் கருத்து


நவ.13,2013. இலங்கையில் கடும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதால் அந்நாடு காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை நடத்தக் கூடாது என்றும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அந்நாடு காமன்வெல்த் அமைப்புக்குத் தலைமையேற்கக் கூடாது என்றும் Alternative People's Forum (APF) என்ற அமைப்பு கூறியுள்ளது.
இலங்கையின் கொழும்புவில் இவ்வெள்ளியன்று தொடங்கவிருக்கும் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டையொட்டி அண்மையில் கூட்டம் நட்த்திய APF என்ற இவ்வமைப்பு, குடியிருப்புக்களிலிருந்து மக்கள் இராணுவத்தால் கட்டாயமாக வெளியேற்றப்படல், சிறுபான்மையினர்க்கெதிரான சமய சகிப்பற்றதன்மை, இந்தியத் தமிழர்க்கு குடியுரிமை வழங்க மறுப்பது போன்ற விவகாரங்களில் கவனம் செலுத்தியது.
இக்கூட்டத்தில், பல்வேறு தூதரக அதிகாரிகள், மக்களாட்சி ஆதரவு குழுக்கள், கிறிஸ்தவத் தலைவர்கள், பொதுமக்கள் நிறுவனங்களின் பிரதிநிதிகள் என, பலர் கலந்து கொண்டனர்.
இந்தியத் தமிழர்கள் என்பவர்கள், 19 மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் சிலோன் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக, தமிழ்நாட்டிலிருந்து இலங்கையில் குடியேறியவர்கள் ஆவர்.
இலங்கையில், 2013ம் ஆண்டு சனவரிக்கும் செப்டம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் கிறிஸ்தவ வழிபாட்டுத்தலங்களுக்கு எதிரான 35 தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன மற்றும் 150க்கும் அதிகமான மசூதிகளும், முஸ்லீம்களின் தொழில்களும் தாக்கப்பட்டுள்ளன.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.