2013-11-13 15:09:37

கத்தோலிக்கத் திருஅவை பிற மதங்களுடன் நடத்திவரும் உரையாடல்


நவ.13,2013. இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் சாதனைகளில் ஒன்றாகவும், கடந்த ஐம்பது ஆண்டுகளில் திருஅவையின் போதனைகளில் முத்திரை பதிப்பதாகவும் திருஅவையின் பல்சமய உரையாடலும், கிறிஸ்தவ ஒன்றிப்பு உரையாடலும் அமைந்துள்ளன.
1963ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டுவரை பல்சமய உரையாடலில் கத்தோலிக்கத் திருஅவையின் அதிகாரப்பூர்வப் போதனைகள் என்ற தலைப்பில் இத்தாலிய மொழியில் 2,100 பக்கங்களைக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள ஏட்டில் முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் தொடங்கி ஆறு திருத்தந்தையர்கள் பல்சமய உரையாடலுக்கு அளித்துள்ள அவர்களின் பங்கு விவரிக்கப்பட்டுள்ளது.
முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் ஜான் அவர்களின் 2 அறிக்கைகள், திருத்தந்தை 6ம் பவுல் அவர்களின் 97 அறிக்கைகள், திருத்தந்தை முதலாம் ஜான் பால் அவர்களின் 2 அறிக்கைகள், திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களின் 591 அறிக்கைகள், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் 188 அறிக்கைகள், உரோம் தலைமையகத்தின் 15 அறிக்கைகள், 3 சட்ட அறிக்கைகள், அனைத்துலக இறையியல் பணிக்குழுவின் அறிக்கைகள் 4 உட்பட 909 அறிக்கைகளை இவ்வேடு கொண்டுள்ளது.
இந்த "நட்புறவின் உரையாடல்" ஏட்டை திருப்பீட பத்திரிகை அலுவலகத்தில் வெளியிட்டுப் பேசிய திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் ஜான் லூயி தவ்ரான், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் பல்சமய உரையாடலுக்கென ஆற்றியுள்ள பணிகளைப் பாராட்டியுள்ளார்.
முந்தைய திருத்தந்தையர்கள் போன்று, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கும் மத சுதந்திரம், புனிதமான மற்றும் இன்றியமையாத உரிமையாக இருந்தது எனவும் கூறினார் கர்தினால் தவ்ரான்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.