2013-11-12 15:10:54

விவிலியத் தேடல் - காணாமற்போன ஆடு மற்றும் நாணயம்!


RealAudioMP3 நவ.,11,2013. மொழியியில் அடிப்படையில் எடுத்துக்காட்டு என்றால் என்ன? நம் அறிவுக்கு எட்டாத ஒன்றை அறிவுக்கு எட்டும் வகையில் விளங்கச்செய்ய நாம் கதைகளைக் கையாளுகின்றோம். எடுத்துக்காட்டு தன் உட்பொருளையும் தாண்டி மற்றொரு பொருளைச் சுட்டிக் காட்ட வல்லது. இந்த உலகம் அழகாக இயங்குகிறது. இந்த இயக்கத்தை நாம் எப்படி மற்றவர்களுக்குப் புரிய வைப்பது? எடுத்துக்காட்டாக, எனத் தொடங்கி 'கைக்கடிகாரத்தை'ப் பாருங்களேன். வெளியே நமக்குத் தெரிவதெல்லாம் இரண்டு முட்களின் நகர்வுதான். ஆனால் இந்தப் பேப்பரின் பின்னால் அதை இயக்கும் பற்சக்கரம், பற்சக்கரத்தை இயக்கும் பேட்டரி, இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் கீ இருக்கின்றன. நம் உலகம் ஒரு கைக்கடிகாரம். சூரியன், பூமி போன்றவைகளின் இயக்கங்களை நாம் பார்க்கின்றோம். ஆனால் இவற்றிற்குப் பின் இறைவனின் கரம் இருக்கின்றது. ஒரு கைக்கடிகாரத்தை ஒரு பொறியாளர் உருவாக்குவதுபோல இந்த உலகத்தை இறைவன் உருவாக்கினார். இப்படியாக கைக்கடிகாரம் என்ற எடுத்துக்காட்டிலிருந்து பிரபஞ்சம் என்ற கைக்கெட்டாத ஒன்றிற்கு நம் மனம் கடந்து செல்கிறது.
எடுத்துக்காட்டு புரிய வேண்டுமென்றால் எடுத்துக்காட்டு சொல்பவரும், கேட்பவரும் ஒரே மொழியியல் தளத்தில் நிற்க வேண்டும். அப்படின்னா என்ன? கண்பார்வையற்ற ஒருவர் ஒரு குழந்தை அழுது கொண்டிருப்பதைக் கேட்கின்றார். அங்கு அருகில் நிற்கும் ஒருவரைப் பார்த்து, 'குழந்தை ஏன் அழுகிறது?' எனக் கேட்கின்றார். 'பால் கொட்டிவிட்டதால் அழுகிறது!' என்கிறார் மற்றவர். 'பாலா...அது எப்படி இருக்கும்?' எனக் கேட்கிறார் இவர். 'வெள்ளையாக இருக்கும்' என்கிறார் மற்றவர். 'வெள்ளையா...வெள்ளை எப்படி இருக்கும்?' என மீண்டும் கேட்கிறார். 'வெள்ளையா...கொக்கு மாதிரி இருக்கும்' என்கிறார் மற்றவர். 'கொக்கா...கொக்கு எப்படி இருக்கும்?' உடனே மற்றவர் தன் கையை கொக்கு போல வளைத்துக் காட்டுகின்றார். அதைத் தடவிப்பார்க்கும் பார்வையற்ற நபர் சொல்கிறார்ஷ 'இப்படி ஒரு பொருள் குழந்தை மேல விழுந்தா அது அழத்தான செய்யும்!'
இருவர் ஒரே மொழியியில் தளத்தில் நிற்கவில்லையென்றால் எடுத்துக்காட்டுக்களைப் புரிந்துகொள்ள முடியாது. அல்லது தவறாகப் புரிந்துகொள்வோம்.
இயேசு மிகவும் யோசித்தே எடுத்துக்காட்டுக்களைக் கையாளுகின்றார். இருந்தாலும் எடுத்துக்காட்டுக்களின் அர்த்தம் சில நேரங்களில் அவரின் சீடர்களுக்குப் புரியவேயில்லை. 'இந்த உவமையின் பொருள் என்ன?' என்று எதிர்கேள்வி கேட்கின்றனர்.
காணாமற்போனவைகளின் எடுத்துக்காட்டின் சூழல் என்ன? இதற்கான பதிலை லூக்கா 15:1-3 நமக்குத் தருகின்றது. 'வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கி வந்தனர். பரிசேயரும், மறைநூல் அறிஞரும், 'இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே' என்று முணுமுணுத்தனர். அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்.'
இயேசுவின் வாழ்வை ஒரே வார்த்தையில் சொன்னால் 'புரட்டிப்போடுதல்' எனலாம். தன் சமகாலத்தவர்களின் சிந்தனைகளைப் புரட்டிப் போடுகின்றார் இயேசு. ரபி என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும். இவர்களோடு சேர வேண்டும். அவர்களோடு சேரக் கூடாது என்று இருந்த சிந்தனையைப் புரட்டிப் போடுகின்றார். 'தாங்கள்' 'அவர்கள்' என்று பிளவுபட்டு நிற்கின்றது யூத மரபு. 'நாங்கள்' நல்லவர்கள். 'அவர்கள்' கெட்டவர்கள். 'நாங்கள்' புனிதர்கள். 'அவர்கள்' பாவிகள். 'நாங்கள்' கடவுளின் ஆசியைப் பெறுவோம். 'அவர்கள்' கடவுளின் சாபத்தைப் பெறுவார்கள். இப்படியாக சிந்தித்த நபர்கள் இயேசுவைத் தங்கள் பக்கம் இல்லாமல் அவர்கள் பக்கம் பார்க்கும்போது முணுமுணுக்கின்றனர். பாலைவனத்தில் தங்கள் முன்னோர்கள் யாவே இறைவனுக்கு எதிராக முணமுணுத்தது போலவே இப்போதும் முணுமுணுக்கின்றனர்.
முதல் எடுத்துக்காட்டைப் பார்ப்போம். லூக்கா 15:3-7. இருக்கின்ற 100 ஆடுகளில் 1 ஆடு காணாமற்போனால் 99 ஆடகளை விட்டுவிட்டு காணமாற்போன ஆட்டைத் தேடிச் செல்ல மாட்டாரா? எனக் கேள்வியோடு தொடங்கிறது இயேசுவின் எடுத்துக்காட்டு. காணமாற்போன ஒரு ஆடு அவ்வளவு முக்கியமானதா? அந்த ஆடு மெல்லியதா, சதைப் பிடித்ததா என்று ஆராய்ச்சி செய்கிறது 'தோமாவின் நற்செய்தி' என்னும் அபோகிரிபல் நூல். பாலஸ்தீனத்துக் கிராமத்துப் பின்புலத்தில் சொல்லப்படும் ஒரு எடுத்துக்காட்டு இது. பாலைவனத்தில் ஆடு மேய்ப்பவர்கள் நிலை எப்படி இருக்கும்? அவர்கள் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். பசுமையான பகுதிகளைத் தேட வேண்டும். எதிரியின் கையிலிருந்து, விலங்குகளின் கையிலிருந்து ஆடகளைக் காப்பாற்ற வேண்டும். சும்மாவே இவ்வளவு வேலைகள் இருக்க, காணாமற்போய்விட்டால் இன்னும் எவ்வளவு அலைய வேண்டும்? பாலைநிலத்தில் காணாமற்போய்விட்டால் கூட ஒரு வேளை 'அதோ அங்கே நிற்கிறது!' எனக் கண்டுபிடித்து விடலாம். ஆனால் மேய்ச்சல் நிலத்தில் தொலைந்துவிட்டால்? யூத மரபில் ஆடு மேய்க்கும் வேலை தாழ்வான வேலையாகக் கருதப்பட்டது. ஆடு மேய்ப்பவர்கள் சுத்தமில்லாதவர்கள் எனவும், அடுத்தவர்களின் விளைச்சலில் ஆடகளை மேய விடும் திருடர்கள் எனவும் கருதப்பட்டனர். ஆகையால் அத்தகைய ஆடு மேய்க்கும் ஒருவரை எடுத்துக் காட்டாக முன்வைத்ததே அவர்களுக்கு நெருடலாக இருந்திருக்கும்.
மற்றொரு பக்கம் இயேசுவின் இந்த எடுத்துக்காட்டு யூதர்களின் கடவுளை நினைவுக்குக் கொண்டு வந்திருக்கும். பழைய ஏற்பாட்டில் யாவே இறைவன் 'ஆயன்' என அழைக்கப்படுகின்றார். 'ஆயனைப்போல தம் மந்தையை அவர் மேய்ப்பார். ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார். ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார். அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார். சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்' (எசாயா 40ஷ11), 'இஸ்ரயேலைச் சிதறடித்தவரே அதைக் கூட்டிச் சேர்ப்பார். ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல அதைக் காப்பார்' (எரேமியா 31ஷ10), 'நானே என் மந்தையைத் தேடிச் சென்று பேணிக்காப்பேன். ஓர் ஆயன் தன் மந்தையினின்று சிதறுண்ட ஆடகளைத் தேடிச் செல்வதுபோல, நானும் என் மந்தையைத் தேடிப் போவேன்' (எசேக்கியேல் 34ஷ11) என இறைவாக்கினர்கள் யாவே இறைவனை 'நல்லாயனாக!' முன்வைக்கின்றனர். மந்தையைப் பேணிக்காப்பவராக, நீர்நிலைக்கு அழைத்துச்செல்பவராக, உணவு தருபவராக, காயங்களுக்குக் கட்டுப்போடுபவராக யாவே இறைவன் இருப்பதாக திருப்பாடல்கள் 23, 28, 78, 80 மற்றும் 100 சொல்கின்றன. புதிய ஏற்பாட்டில் இயேசு 'நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார். நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அது போல நானும் என் ஆடகளை அறிந்திருக்கிறேன். என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன்' (யோவான் 10ஷ15) எனத் தம்மைக் குறித்து அறிவிக்கின்றார். ஆனால் தன் தோளில் ஆட்டைச் சுமப்பதாக இயேசுவைச் சித்தரிக்கும் படங்கள் 3ஆம் நூற்றாண்டிற்குப் பின்பே வந்தவை.
இயேசு குறிப்பிடும் எடுத்துக்காட்டில் வரும் ஆயன் காணாமற்போன ஒரு ஆட்டைத் தேடிப் புறப்படுகின்றார். அவர் அப்படிப் போகும்போது 99 ஆடகளை யார் பார்த்துக்கொள்வர்கள்? என்று நம் மனம் பதறுகிறது. அவரின் சிந்தனையில் நிறைந்திருப்பதெல்லாம் 'காணாமற்போன ஒன்றுதான்!' அது சாப்பிட்டுரக்குமா? சாப்பிட்டிருக்காதா? எங்கே ஒதுங்கி நிற்கும்? காயம் பட்டிருக்குமா? யாராவது கடத்தியிருப்பார்களா? ஒரு வழியாகக் கண்டுபிடித்தும் விடுகிறார். இயேசுவின் புரட்டிப்போடுதல் இங்கேயும் வெளிப்படுகிறது. கணிதவியல் அடிப்படையில் 99 ஒன்றை விட 99 மடங்கு பெரியதென்றாலும், இயேசுவின் பார்வையில் ஒன்றே 99 விட பெரியதாகத் தெரிகின்றது. நம் வாழ்வின் பெரியவை என நாம் நினைப்பவை எல்லாம் எப்போதும் பெரியவைகள் அல்ல. சின்னஞ்சிறியவைகளே வாழ்வின் பெரியவைகளை நிர்ணயம் செய்கின்றன.
இயேசுவின் எடுத்துக்காட்டு இரண்டு வகைகளில் பரிசேயர்களின் கண்களை உறுத்துகின்றது. 1) கடவுளை ஆயன் என அழைப்பது. 2) காணமற்போனவர்கள் என நினைக்கும் பாவிகளையும், வரிதண்டுபவர்களையும் கடவுள் தேடுகிறார் எனச் சொல்வது.
இந்த எடுத்துக்காட்டு நமக்கு வைக்கும் பாடங்கள் இரண்டு:
1. நாம் காணாமற்போனவர்கள், பாவிகள், தீண்டத்தகாதவர்கள் என மற்றவர்கள் தீர்ப்பு எழுதுகிறார்களா? கவலை வேண்டாம். நம்மைத் தேடித் தன் தோளில் சுமக்க ஒரு ஆயன் இருக்கின்றார்.
2. நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்த எடுத்துக்காட்டைச் சொல்லி இன்றைய சூழலில் அருள்நிலையில் இருப்பவர்கள் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றிக் குறிப்பிடும்போது இப்படிச் சொல்கின்றார். கதையில் வரும் ஆயன் காணாமற்போன ஒரு ஆட்டைத் தேடிச் செல்கின்றார். ஆனால் இன்று திருச்சபை என்னும் மந்தையில் இருந்து 99 ஆடுகள் காணாமற்போய்விட்டன. உள்ளே இருப்பது ஒரு ஆடுதான். இன்று நாம் காணாமற்போன ஆடகளைத் தேடிச்செல்வதற்குப் பதில் இருக்கின்ற ஒரு ஆட்டுக்கு முடிவெட்டி அழகுபார்த்துக்கொண்டிருக்கிறோம். இன்று நாம் ஆயர்களா? முடி கத்தரிப்பவர்களா? திருத்தந்தை அவர்களின் இந்தக் கேள்வி அருள்நிலையில் இருக்கும் அனைவரும் செய்ய வேண்டிய பணியின் கட்டாயத்தை உணர்த்துகிறது.
இயேசு சொல்லும் இரண்டாம் எடுத்துக்காட்டு: காணாமற்போன திராக்மா (நாணயம்). லூக்கா 15:8-10. இந்த எடுத்துக்காட்டு லூக்கா நற்செய்தியில் மட்டுமே உள்ள எடுத்துக்காட்டு. முதல் எடுத்துக்காட்டின் மறுவடிவமே இது. இரண்டு எடுத்துக்காட்டுக்களையும் இணைக்கும் வார்த்தை 'அல்லது'. பெண் ஒருவரிடம் இருந்த 10 திராக்மாக்களுள் ஒன்று தொலைந்து விடுகிறது. திராக்மா என்பது ஒரு தொழிலாளரின் ஒரு நாள் கூலிக்கு இணையான கிரேக்க வெள்ளி நாணயம். ஏறக்குறைய அதன் மதிப்பு 100 ருபாய் என வைத்துக்கொள்வோம். தன்னிடம் உள்ள 10 நூறு ருபாய் நாணயத்தில் ஒன்று தொலைந்து போய்விடுகிறது. நாணயம் காணாமற்போனவுடன் பெண்ணின் பதற்றத்தையும், தேடுதலையும் மூன்று வினைச்சொற்களாகத் தருகின்றார் லூக்கா: எண்ணெய் விளக்கை ஏற்றி, வீட்டைப் பெருக்கி, கவனமாகத் தேடி. இந்த மூன்று சொற்களும் அந்தப் பெண்ணின் வீடு எப்படி இருந்திருக்கும் என்பதை நம் மனக்கண்முன் கொண்டுவருகிறதுஷ அழுக்கு, தூசி படிந்த தளம், குறகிய கதவு, இருண்ட வீடு. கண்டுபிடித்தவுடன் தன் தோழியரையும், அண்டைவீட்டாரையும் அழைத்துக் கொண்டாடுகிறார். அவரின் தோழியரும், அண்டை வீட்டாரும் கொண்டாட்டத்தில் கலந்திருப்பார்களா? 'இவளுக்கு வேறு வேலையில்லை. ஒரு திராக்மாதானே. போனால் போகட்டும். சம்பாதித்துக்கொள்ளலாமே' என ஓய்ந்திருப்பார்களா? 'இதற்கெல்லாம் கொண்டாட்டமா?' எனக் கேட்டிருப்பார்களா? அல்லது 'ஐயயோ, கிடைத்து விட்டதே!' எனப் பொறாமையில் முகம் வாடியிருப்பார்களா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இயேசுவின் எடுத்துக்காட்டில் பதில் இல்லை. இதை வாசிக்கும் ஒவ்வொருவரும் தன் உள்ளத்தில் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.
பல நேரங்களில் மற்றவருக்கு நீதியும், நமக்கு இரக்கமும் வேண்டுகிறோம். நமக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, அடுத்தவர்களுக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என நினைக்கின்றோம். 'நாங்கள்' 'அவர்கள்' என்ற பேதம் களைந்து இறைவன் தரும் விருந்தில் கலந்து கொள்ள நம்மால் முடியுமா?








All the contents on this site are copyrighted ©.