2013-11-12 15:50:16

செபத்துக்கும், மனிதாபிமான உதவிகளுக்கும் பிலிப்பீன்ஸ் ஆயர்கள் வேண்டுகோள்


நவ.12,2013. பிலிப்பீன்சில் ஹையான் கடும் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கென அவசர நிவாரண உதவிகளுக்கு விண்ணப்பித்துள்ள அதேவேளை, உறவுகளையும் குடும்பத்தினரையும், அனைத்தையும் இழந்து துன்புறும் மக்களுக்கு ஆறுதலாக, நவநாள் செபங்களைத் தொடங்கியுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
இம்மாதம் 19ம் தேதிவரை நடைபெறும் இந்நவநாள் பக்தி முயற்சிகளின்போது பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கென நிதியும் திரட்டப்படும் எனத் தெரிவித்துள்ள பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் ஊடகப் பணிக்குழுத் தலைவர் ஆயர் Pedro Quitorio, ஹையான் புயல் தாக்கியுள்ள பகுதியில் பல மறைமாவட்டங்கள் உள்ளன என்றும், Borongan பங்குத்தளத்தில் மட்டும், யுனெஸ்கோ பாரம்பரிய ஆலயம் உட்பட 95 விழுக்காடு வீடுகள் அழிந்துவிட்டன என்றும் கூறினார்.
மேலும், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் மனிதாபிமான அலுவலகம் 2 கோடியே 50 இலட்சம் டாலரை அவசரகால உதவியாக அனுப்பியுள்ளது.
இதற்கிடையே, பிலிப்பீன்ஸ் அரசு, பேரிடர்நிலை என அறிவித்துள்ளது.
ஹையான் கடும் புயலுக்கு உலகின் வெப்பநிலை மாற்றமே காரணம் என, பிலிப்பீன்சில் மறைப்பணியாற்றி வரும் கொலும்பன் மறைபோதக சபை கருத்து தெரிவித்துள்ளது.

ஆதாரம் : Fides/ UN







All the contents on this site are copyrighted ©.