2013-11-11 15:29:34

பிலிப்பைன்சில் கடும் சூறாவளியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக திருத்தந்தை செபம்


நவ.11,2013. பிலிப்பைன்ஸ் நாட்டில், ஹையான் எனப்படும் கடும் சூறாவளியில் இறந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்காகச் செபித்த அதேவேளை, அம்மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிலிப்பைன்சில் கடும் சூறாவளியால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடனான தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்த அதேவேளை, இதில் பெருமளவில் சேதங்களும் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது குறித்த தனது ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப் பின்னர் இதனைத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ், வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஏறத்தாழ 50 ஆயிரம் பயணிகளை அமைதியாகச் செபிக்கச் சொல்லித் தானும் அவர்களோடு சேர்ந்து அமைதியாகச் செபித்த பின்னர் அருள் நிறைந்த மரியே வாழ்க என்ற செபத்தையும் சொன்னார்.
கடந்த வெள்ளியன்று பிலிப்பைன்சின் மத்திய பகுதியிலுள்ள Leyte, Cebu ஆகிய மாநிலங்களை, மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கிய ஹையான் கடும் சூறாவளியில் 10 ஆயிரம் பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும், 6,30,000 பேர் வரை புலம் பெயர்ந்துள்ளனர்.
மேலும், “உடைக்கப்பட கண்ணாடியின் இரவு” என்ற யூதஇன அழிப்பு நடந்ததன் 75ம் ஆண்டையொட்டி, இதில் பாதிக்கப்பட்ட நமது மூத்த சகோதரர்களான யூதர்களுடனான நமது தோழமையுணர்வைத் தெரிவிப்போம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
1938ம் ஆண்டு நவம்பர் 9க்கும் 10க்கும் இடைப்பட்ட இரவில் யூதர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறையில் யூதர்களின் கடைகளும் வீடுகளும் தொழுகைக்கூடங்களும் எரிக்கப்பட்டன.
இன்னும், ஜெர்மனியின் Paderbornல் இஞ்ஞாயிறு மாலையில் இறையடியார் Maria Theresia Bonzel, முத்திப்பேறு பெற்றவராக அறிவிக்கப்பட்டுள்ளது குறித்தும் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். இவர், தனது பிறரன்புக்குத் தேவையான வல்லமையை திருநற்கருணை மூலம் பெற்றார் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.