2013-11-11 15:28:56

நித்திய வாழ்வு என்பது மற்றொரு வாழ்வு, இறப்பு நமது தோளுக்குப் பின்னால் இருக்கின்றது, திருத்தந்தை பிரான்சிஸ்


நவ.11,2013. நித்திய வாழ்வு நம் ஒவ்வொருவரின் இவ்வுலக வாழ்வை ஒளிர்வித்து அதற்கு நம்பிக்கையை அளிக்கின்றது என்று இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இறப்புக்குப் பின்னர் உயிர்ப்பு உண்டு என்பதை மறுக்கும் சதுசேயர்களின் எண்ணங்களுக்கு இயேசு பதில் கூறியதை விளக்கும் இஞ்ஞாயிறு நற்செய்திப் பகுதியை மையமாக வைத்து மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், நித்திய வாழ்வு குறித்துப் பேசினார்.
நித்திய வாழ்வு என்பது மற்றொரு கூறில் மற்றொரு வாழ்வு, நம் இவ்வுலக வாழ்வோடு தொடர்புடைய திருமணம் நித்திய வாழ்வில் இருக்காது என்றும், உயிர்த்தெழுந்தவர்கள் வானதூதர்களைப் போல மற்றொரு நிலையில் இருப்பார்கள், அந்நிலையை நாம் கற்பனை செய்யவும் அனுபவிக்கவும் முடியாது என்றும் கூறினார் திருத்தந்தை.
இயேசு உயிர்த்தெழுதலுக்குச் சாட்சியத்தை, “மோசேயும் எரியும் புதரும்” என்ற நிகழ்வில் கண்டார் எனவும், மோசேக்கு, எரியும் புதரில் கடவுள் தன்னை ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் என வெளிப்படுத்தினார், கடவுளின் பெயர் அவரோடு ஒன்றிணைந்துள்ள மனிதர்களின் பெயர்களோடு தொடர்பு கொண்டுள்ளது எனவும், இந்தப் பிணைப்பு, மரணத்தைவிட உறுதியானது எனவும் கூறினார் திருத்தந்தை.
இதனாலே இயேசு, தம்மை இறந்தோரின் கடவுள் அல்ல, ஆனால் வாழும் கடவுள் என்று சொன்னார், இந்த உறுதியான, அடிப்படை உடன்படிக்கை இயேசுவுக்கு உரியது, இயேசுவே உடன்படிக்கை, அவரே வாழ்வும் உயிர்ப்பும், கடவுள், இயேசு வழியாக நமக்கு நித்திய வாழ்வை அளிக்கிறார், கடவுள் நமக்கென அமைத்துள்ள வாழ்வு நமது கற்பனைக்கு எட்டாதது, ஏனெனில் கடவுள் தம் அன்பாலும் கருணையாலும் நம்மைத் தொடர்ந்து வியப்பில் ஆழ்த்தி வருகிறார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நாம் கடவுள்மீது கொண்டுள்ள அன்பு மற்றும் விசுவாச அனுபவம், நம் இதயங்களில் தீ போல் பற்றி எரிந்து, உயிர்ப்பின்மீதான நமது நம்பிக்கையை அதிகரிக்கின்றது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், கடவுளின் அன்பு எல்லையற்றது, அவர் நமக்காகக் காத்திருக்கிறார், இந்த நித்திய உறுதிபாட்டுடன் நம் ஒவ்வொருவருடனும் வருகிறார் என மூவேளை செப உரையில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.