2013-11-09 15:22:08

திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலிய திருப்பயணிகளிடம் : ஆண்டவரின் இதயத்தைத் தட்டுங்கள்


நவ.09,2013. திருப்பயணம் என்பது, நமது பல தேவைகளுக்காக ஆண்டவரின் இதயத்தைத் தட்டுவதற்கான தருணம், ஆண்டவர் செவிசாய்க்கிறார், அவர் எப்பொழுதும் செவிசாய்க்கிறார் என்று இச்சனிக்கிழமை காலையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தென் இத்தாலியின் லிகூரியாவிலிருந்து வந்திருந்த திருப்பயணிகளிடம் இவ்வாறு உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், உரோம் நகரில் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்துக்கு வந்து திருப்பலியில் கலந்து கொள்வது எவ்வளவு அழகானது என்று கூறினார்.
திருப்பயணம் என்பது, எப்பொழுதும் ஆண்டவரை மையப்படுத்தி, அவரைச் சந்தித்து விசுவாசத்தில் வளரும் நோக்கத்தைக் கொண்டுள்ளது என்று உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், இந்த ஆன்மீகச் சந்திப்பு நமது வாழ்வுப் பயணத்தில் முன்னோக்கிச் செல்வதற்கு உதவுகின்றது என்றும் கூறினார்.
திருப்பயணிகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் ஓர் ஆவல், ஒரு பிரச்சனை, ஒரு துன்பம்.. இப்படி ஏதாவது ஒன்றை ஆண்டவரிடம் சொல்வதற்கு இதயத்தில் வைத்திருப்பீர்கள், இந்தத் திருப்பயண நாள்களில் இவற்றுக்குத் தீர்வு கண்டு ஆண்டவரில் மிக நெருக்கமாக வளருங்கள், ஆண்டவர் உங்களுக்காக எப்பொழுதும் காத்திருக்கிறார், நம் எல்லாருக்காகவும் காத்திருக்கிறார், நமக்காகக் காத்திருப்பதில் அவர் சோர்வடைய மாட்டார், அவர் எப்பொழுதும் நமக்காகக் காத்திருக்கிறார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நாம் செபத்தில் கேட்பதற்கு நம் ஆண்டவர் எப்பொழுதும் தீர்வு வழங்கமாட்டார், ஆயினும் அவர் எப்பொழுதும் செவிசாய்க்கிறார் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், தனக்காகச் செபிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அவர்கள் பகுதியிலுள்ள சிறார், முதியோர் மற்றும் நோயாளிகளை, தனது பெயரால் வாழ்த்துமாறும் இச்சனிக்கிழமை காலையில் லிகூரியா திருப்பயணிகளிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.