2013-11-09 15:32:59

334வது பிறந்தநாள்: வீரமாமுனிவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை


நவ.09,2013. தமிழ் வளர்த்த இத்தாலியப் பேரறிஞர் வீரமாமுனிவரின் 334வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மெரீனா கடற்கரை சாலையில் வீரமாமுனிவர் சிலைக்கு தமிழக அமைச்சர்கள் இவ்வெள்ளியன்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் 1680ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பிறந்த கான்ஸ்டன்டைன் ஜோசப்பு பெஸ்கி என்பவர், இயேசு சபையில் சேர்ந்து 1709ம் ஆண்டில் அருள்பணியாளராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார்.
மறைபரப்பும் நோக்கத்தில் 1710ம் ஆண்டு தமிழகத்துக்கு வந்த இவர், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசுக் கிறிஸ்துவின் வாழ்க்கைத் தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப "தேம்பாவணி" என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது.
மறை பரப்பு முயற்சிக்காக முதலில் தமிழைக் கற்றுக்கொண்ட இவர், தமிழில் வியத்தகு புலமை பெற்று இலக்கணம், இலக்கியம், அகராதி படைத்து தமிழுக்குச் செழுமையூட்டினார். இவர் தமது பெயரினை தைரியநாதன் என்று முதலில் மாற்றிக் கொண்டார். பின்னர், அப்பெயர் வடமொழி என்பதாலும், நன்கு தமிழ் கற்றதாலும், தமது இயற்பெயரின் பொருளைத் தழுவி, செந்தமிழில் வீரமாமுனிவர் என இவர் மாற்றிக் கொண்டார்

ஆதாரம் : Ind.Sec








All the contents on this site are copyrighted ©.