2013-11-07 16:13:35

திருத்தந்தை பிரான்சிஸ் : யாரும் காணாமற்போவதை இறைவன் விரும்பாததால், அவர் அவர்களைத் தேடுகிறார்


நவ.07,2013. காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிப்பது இறைவனுக்கு மகிழ்ச்சி தருவது, ஏனெனில் அவர் காணாமற்போன ஆடுகள்மீது அன்புடன்கூடிய பலவீனத்தைக் கொண்டிருக்கிறார் என்று இவ்வியாழனன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இவ்வியாழன் காலை திருப்பலி நிறைவேற்றி காணாமற்போன ஆடு மற்றும் காணாமற்போன நாணயம் பற்றிய உவமையை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், இறைவன் யாரும் காணாமற்போவதை விரும்பாததால், அவர் அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து மந்தைக்குக் கொண்டு வருகிறார், அப்படிக் கொண்டுவருவதில் மகிழ்ச்சி காண்கிறார் என்றும் கூறினார்.
இயேசு செய்தவைகள் குறித்து புண்பட்டு, இந்த மனிதர் ஆபத்தானவர், வரிதண்டுவோரோடும் பாவிகளோடும் உணவருந்துகிறார், இறைவனைப் புண்படுத்துகிறார், இறைவாக்கினரின் திருப்பணியை அவமானப்படுத்துகிறார் என்றெல்லாம் அவர் பற்றி புகார் செய்த பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களின் மனநிலையை இந்நாளைய நற்செய்தி எடுத்துரைக்கின்றது என்றும், இது வெளிவேடத்தின் இசை என்று சொல்லி, அவர்களின் இந்த முணுமுணுப்பு வெளிவேடத்துக்கு இயேசு மகிழ்வான உவமையால் பதில் சொன்னார் என்று விளக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்தச் சிறிய உவமைப் பகுதியில் மகிழ்ச்சி என்ற சொல் மூன்று முறைகளும், அகமகிழ் என்ற சொல் ஒரு முறையும் இடம்பெற்றுள்ளன என்றுரைத்த திருத்தந்தை, பரிசேயர்கள் இது குறித்து துர்மாதிரிகை அடைந்தனர், ஆனால் வானகத்தந்தை அகமகிழ்ந்தார், இந்த உவமையில் இது மிகவும் ஆழமான செய்தி என்றும் கூறினார்.
இறைவன் இழப்பவர் அல்ல, அதனால்தான் எதையும் இழந்துபோகாமலிருக்க அவரே சென்று தேடுகிறார், அவர் தேடும் இறைவன், தம்மைவிட்டு வெகு தொலைவில் இருக்கும் எல்லாரையும் அவர் தேடுகிறார், ஆயன் காணாமற்போன ஆட்டைத் தேடுவதுபோல் இறைவன் தம்மைவிட்டு வெகு தூரமாய் இருப்பவர்களைத் தேடுகிறார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தம்மவர்களில் யாரும் காணாமற்போவதை இறைவனால் தாங்கிக் கொள்ள முடியாது என்றும், இழந்த ஆட்டைக் கண்டுபிடித்த கண்டுபிடித்தபோது அதை மர்றவர்களோடு கொண்டுவந்து சேர்க்கிறார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசுவுக்கு எதிராக முணுமுணுத்தவர்கள் அவருக்கு வெகு தூரத்தில் இருப்பவர்கள் என்றும், இறைவனின் மகிழ்ச்சி, பாவியின் இறப்பில் அல்ல, பாவியின் வாழ்வில் உள்ளது என்றும் உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், நான் ஒரு பாவி, நான் இதை அதைச் செய்தேன் என்று நாம் சொல்லும்போதும்கூட, உன்னை அன்பு செய்கிறேன், உன்னைத் தேடிக் கண்டுபிடித்து எனது இல்லத்துக்கு அழைத்து வரப்போகிறேன் என இறைவன் சொல்கிறார் திருப்பலி மறையுரையில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.