2013-11-07 15:07:46

கற்றனைத்தூறும்.....டெங்கு காய்ச்சல்


டெங்கு என்ற நுண்கிருமி நம் உடலைத் தாக்கும்போது ஏற்படும் காய்ச்சல்தான் டெங்கு என அழைக்கப்படுகிறது. ஏடஸ் என்ற வகைக் கொசுக்களால், குறிப்பாக ஏடஸ் எஜிப்டி (Aedes aegypti) என்ற வகைக் கொசுவால் டெங்கு பரவுகிறது. மற்ற கொசுக்களைப் போல் சாக்கடை நீரில் அல்ல, நல்ல தண்ணீரிலேயே இவை வளரக் கூடியவை. மற்ற கொசுக்களைப் போல் அல்லாமல் பகலில் மனிதர்களைக் கடிக்கக்கூடியவை. பெண் கொசுதான் கடிக்கும். காரணம் அதன் முட்டை நலமாக இருக்க, மனித உடலின் இரத்தத்திலுள்ள புரதம் அதற்குத் தேவை. அது நம்மைக் கடித்து, இரத்தத்தை உறிஞ்சும்போது அதன் வயிற்றில் உள்ள நுண்கிருமி நம் உடலுக்குள் புகுந்து விடுகிறது. ஒரு கடியிலேயேகூட நுண்கிருமி நம்மைத் தாக்கும். ஏடஸ் கொசுவின் வாழ்நாள் இரண்டு வாரங்கள் மட்டுமே. இந்த 2 வாரங்களில் 3 முறை முட்டையிடும். ஒவ்வொரு முறையும் 100 முட்டைகள் வரை இடும். உலர்ந்த சூழல் இருந்தால் 9 மாதங்கள் வரை இந்த முட்டைகள் உயிர்ப்புடன் இருந்து அதன்பிறகு அதற்குத் தகுந்த சுத்தமான நீர், உணவு கிடைத்தால் குஞ்சுகளாகப் பொரிக்கும். ஒரு கொசுவில் டெங்கு நுண்கிருமி இருந்தால் அதிலிருந்து வரும் முட்டை, குஞ்சு ஆகியவை மூலம் பெருகும் அனைத்துக் கொசுக்களிலும் இந்த நுண்கிருமி இருக்கும்
டெங்கு காய்ச்சல் தாக்கினால், காய்ச்சல், உடல்வலி, தலைவலி, மயக்கம், வாந்தி ஆகிய இவற்றில் ஏதாவது ஒன்று இருக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட அறிகுறிகள் சேர்ந்தும் வரலாம். 2009ம் ஆண்டு உலக நலவாழ்வு நிறுவனம் டெங்கு காய்ச்சலை இரண்டு வகையாகப் பிரித்தது. 1. சிக்கலில்லாத சாதாரணக் காய்ச்சல். 2. இரத்தக் கசிவு உள்ள தீவிரக் காய்ச்சல். இந்த 2வது வகையில் இரத்த அழுத்தம் குறையும். உடனே மருத்துவ ஆலோசனைகளைப் பெற வேண்டும். டெங்குவினால் ஏற்படும் சாதாரணக் காய்ச்சலுக்குப் பொதுவாக, பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொண்டாலே சரியாகிவிடும்.
சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். சாக்கடை நீர் மட்டுமல்ல, சாதாரணத் தண்ணீர்கூடத் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
உலகம் முழுவதும் ஆண்டுக்கு ஐந்து கோடி முதல் 10 கோடி மக்களை டெங்கு தாக்குகிறது. 1960ம் ஆண்டில் இருந்ததைவிட 2010ம் ஆண்டில் அதன் தாக்கம் முப்பது மடங்கு அதிகரித்திருக்கிறது. இதற்கு புவி வெப்பமயமாதல், நகர்மயமாதல் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன.

ஆதாரம் : இணையத்திலிருந்து







All the contents on this site are copyrighted ©.