2013-11-07 16:13:21

CRI எனும் இந்திய துறவுசபைகளின் அமைப்பின் 50ம் ஆண்டுக் கொண்டாட்டம்


நவ.,07,2013. CRI எனும் இந்திய துறவுசபைகளின் அமைப்பு இவ்வியாழன் முதல் சனிக்கிழமைவரை தன் 50ம் ஆண்டுக் கொண்டாட்டத்தை அஸ்ஸாம் மாநிலத்தின் Guwahatiயில் சிறப்பித்து வருகின்றது.
டான்போஸ்கோ இல்லத்தில் இடம்பெற்றுவரும் இந்தப் பொன்விழாக் கொண்டாட்டங்களில் இந்திய துறவுசபைகளின் பிரதிநிதிகளாக ஏறத்தாழ 500 பேர் கலந்துகொள்கின்றனர்.
'கடந்த காலங்களிலிருந்து கற்றுக்கொண்டு, வருங்காலத்தை வடிவமைத்தல்' என்ற கருப்பொருளை மையமாகக்கொண்டு நடத்தப்படும் இந்த மூன்று நாள் கொண்டாட்டம் மற்றும் கலந்துரையாடல்களில், துறவற வாழ்வின் அர்த்தம், அதன் முதன்மை நோக்கங்கள், இன்றைய உலகில் துறவற வாழ்வு எதிர்நோக்கும் சவால்கள், திருஅவைத் தலைமைத்துவத்தில் பெண்களின் பங்கு போன்றவை குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேராயர் தாமஸ் மேனாம்பரம்பில் உட்பட பல்வெறு இந்தியத் திருஅவைத் தலைவர்கள் உரை வழங்குவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கான திருப்பீடத் தூதுவர் பேராயர் Salvatore Pennachioயுடன் ஆயர்கள் பலர் இணைந்து நிறைவேற்றும் திருப்பலியும் இடம்பெறவுள்ள இக்கொண்டாட்டங்களின்போது, திருஅவையின் சமூகப்பணிகள் குறித்த புத்தகங்களும் வெளியிடப்படும்.

ஆதாரம் : UCAN








All the contents on this site are copyrighted ©.