2013-11-06 15:08:13

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


நவ.,06,2013. நவம்பர் மாதத்தின் குளிர் இன்னும் உரோம் நகரை அண்டாதிருப்பதால் திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகமும் திறந்த வெளியில் தூய பேதுரு பேராலய வளாகத்திலேயே இடம்பெற்றுவருகிறது. இதமான வெப்பத்தின் அடியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் குழுமியிருக்க, கத்தோலிக்கர்களின் விசுவாச அறிக்கை குறித்த தன் மறைபோதனையைத் தொடர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். கத்தோலிக்க விசுவாச அறிக்கையில் வரும் 'புனிதர்களின் ஒன்றிப்பை விசுவசிக்கிறேன்' என்பதை குறித்ததாக திருத்தந்தையின் இப்புதன் உரை இருந்தது.
'புனிதர்களின் ஒன்றிப்பு' என்பது ஆட்களின் ஒன்றிப்பை மட்டுமல்ல, ஆன்மீகப்பொருட்களின் ஒன்றிப்பையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. இந்த ஆன்மீகப்பொருட்களில் நம் பகிர்வு மூலம் கிறிஸ்து மற்றும் அவரின் திரு உடலாகிய திருஅவையின் அங்கத்தினர்களுடனான ஒன்றிப்பில் வளர்கிறோம். இன்று நாம் இந்த ஆன்மீகச்செல்வங்களுள் மூன்றைக் குறித்து நோக்குவோம். அவையாவன, திருவருட்சாதனங்கள், தனிவரங்கள் மற்றும் பிறரன்பு. திருவருட்சாதனங்களில் நாம் கிறிஸ்துவை அவரின் அனைத்து மீட்புவல்லமையில் சந்திக்கிறோம். மற்றும், விசுவாச மகிழ்வில் நாம் உறுதிப்படுத்தப்படுவதோடு, மற்றவர்களோடு அம்மகிழ்வை பகிரவும் அனுப்பப்படுகிறோம். தூய ஆவியால் நம்மீது பொழியப்படும் அருங்கொடைகள், ஆன்மீக வரங்கள், பல்வேறுவகைப்பட்ட தனிவரங்கள் ஆகியவைகளினால் நாம் திருஅவையை ஒன்றிப்பிலும், புனிதத்துவத்திலும், ஊழியத்திலும் கட்டியெழுப்ப உதவுகிறோம். இந்த ஆன்மீகக் கொடைகள் அனைத்தும் தங்கள் முழுநிறைவைப் பிறரன்பில் கண்டுகொள்கின்றன. கிறிஸ்துவின் அன்பில் நம் வளர்ச்சிக்காகவே அனைத்தும் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளன. ஆன்மீகப்பொருட்களில் நம் ஒன்றிப்பை அதிகரிக்குமாறு இறைவனை நோக்கி வேண்டுவோம். இதன்மூலம், நம்மிடையே பிரசன்னமாயிருந்து செயலாற்றும் இறைவனின் மீட்பு அன்பின் மகிழ்வுநிறை அடையாளமாகவும், கிறிஸ்துவிலான ஒன்றிப்பிலும், மேலும் முழுமையான வாழ்வை நம்மால் வாழ இயலும் என தன் மறைபோதகத்தை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பின் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.