2013-11-06 15:17:25

தமாஸ்கு திருப்பீட தூதரகம் தாக்கப்பட்டிருப்பது குறித்து மும்பை கர்தினால் ஆஸ்வால்டு அதிர்ச்சி


நவ.06,2013. சிரியாவின் தமாஸ்கு திருப்பீட தூதரகம் பீரங்கித் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது குறித்து இந்தியத் திருஅவை ஆழ்ந்த கவலையும் வருத்தமும் அடைந்திருப்பதாக, இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் கூறியுள்ளார்.
இந்தியாவின் ஒரு கோடியே 80 இலட்சம் கத்தோலிக்கர் சார்பாக, தமாஸ்கு திருப்பீட தூதர் பேராயர் மாரியோ செனாரி அவர்களுக்கு, ஒருமைப்பாட்டுணர்வுச் செய்தியை அனுப்பியுள்ள மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு, பேராயர் செனாரி அவர்கள் தொடர்ந்து அத்தூதரகத்தில் தங்குவதற்கு எடுத்திருக்கும் தீர்மானம் குறித்து வியப்படைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வத்திக்கானின் தூதரக இல்லம் திருத்தந்தையின் இல்லம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள கர்தினால் ஆஸ்வால்டு, சிரியாவில் அமைதி நிலவ திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடர்ந்து விடுத்துவரும் அழைப்பையும், திருத்தந்தையின் அழைப்பின்பேரில் கடந்த செப்டம்பர் 7ம் தேதி உலக அளவில் சிரியாவுக்காக நடத்தப்பட்ட செபத்தையும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இச்செவ்வாய் காலையில் தமாஸ்கு திருப்பீட தூதரகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் அக்கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் வாழும் திருப்பீட தூதரைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது என்றும் திருப்பீட தூதரின் செயலர் அருள்பணி ஜார்ஜோ கூறினார்.
இந்த வன்முறையில் உயிரிழப்புகள் எதுவும் இடம்பெறவில்லையென்றும், அக்கட்டிடத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி அழிக்கப்பட்டுள்ளது என்றும் அருள்பணி ஜார்ஜோ மேலும் கூறினார்.
மேலும், இத்தாக்குதலையொட்டி திருப்பீட தூதரோ, திருப்பீட தூதரகத்தின் பணியாளர்களோ, யாரும் அவ்விடத்தைவிட்டுச் செல்லமாட்டார்கள் என்றும் அக்குரு தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.