2013-11-06 15:17:18

குடும்பம் குறித்த உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றம் திருஅவையின் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும்,வத்திக்கான் அதிகாரிகள்


நவ.06,2013. குடும்பம் குறித்த 2014ம் ஆண்டின் உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்திற்கானத் தயாரிப்புகள், திருஅவையின் போதனைகளுக்கு ஒத்தவகையில் அமையும் கத்தோலிக்கரின் எண்ணங்களின் மதிப்பீடுகளை உள்ளடக்குவதாய் இருந்தாலும், மாமன்றத்தின் பணிகள் கத்தோலிக்கக் கோட்பாடுகளை அடிப்படையாகக்
கொண்டிருக்கும் என்று வத்திக்கான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றத்துக்கு, பொது மக்களின் தற்போதைய கருத்துக்கள் அல்ல, ஆனால், திருஅவையின் அதிகாரப்பூர்வ கோட்பாடுகளே அடிப்படையாக இருக்கும் என்று, இம்மாமன்றத்தின் பொது விளக்கவுரையாளர் புடாபெஸ்ட் கர்தினால் Péter Erdő, இச்செவ்வாயன்று இம்மாமன்றத்திற்கான தயாரிப்பு ஏட்டை நிருபர் கூட்டத்தில் வெளியிட்டபோது கூறினார்.
மேலும், இந்நிருபர் கூட்டத்தில் பேசிய உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச் செயலர் பேராயர் Lorenzo Baldisseri, திருமணம், குடும்பம் குறித்த கத்தோலிக்கப் போதனைகளை ஊக்குவித்தல் மற்றும் ஏற்பது, இன்னும், இப்போதனைகள் சந்திக்கும் கலாச்சார, சமூகச் சவால்கள் பற்றிய 39 கேள்விகளை இத்தயாரிப்பு ஏடு கொண்டுள்ளது என்றும் விளக்கினார்.
திருமணமுறிவு, மறுதிருமணம், திருமணமாகாமலே சேர்ந்து வாழ்தல், ஒரே பாலினச் சேர்க்கைத் திருமணங்கள், கருத்தடை சாதனங்கள் போன்ற தலைப்புகளும் இக்கேள்விகளில் இடம்பெற்றிருப்பதாக பேராயர் Baldisseri கூறினார்.
"நற்செய்தி அறிவிப்புச் சூழலில் குடும்பத்தின் மேய்ப்புப்பணி சவால்கள்" என்ற தலைப்பில் 2014ம் ஆண்டு அக்டோபர் 5 முதல் 19 வரை உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றம் வத்திக்கானில் நடைபெறும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.