2013-11-05 15:31:09

செவ்வாய்க் கிரகத்திற்கு இந்தியா செயற்கைகோள்


நவ.05,2013. செவ்வாய்க் கிரகத்தை ஆய்வு செய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியாவையும் சேர்த்து பெருமிதப்பட வைக்கும் மங்கள்யான் செயற்கைகோள் சரியாக 2.38 மணிக்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி,எஸ்.எல்.வி. விண்கலம் மூலம் ஏவப்பட்டது.
450 கோடி ரூபாய் செலவில் இந்தியா தனது சொந்த முயற்சியில் இதனை உருவாக்கியுள்ளது. மொத்தம் 200 மில்லியன் கி.மீ. பயணம் கொண்ட மங்கள்யான், திட்டமிடப்படி ஏவப்பட்டதால் வரும் 30ம் தேதி பூமியின் வட்டப்பாதையில் இருந்து விடுபட்டு செவ்வாயை நோக்கி தனது நீண்ட பயணத்தைத் துவக்கும்.
இந்த மங்கள்யான்' செயற்கைக்கோள், 1350 கிலோ எடை கொண்டது. இது செவ்வாய் கிரகத்தில், தண்ணீர், கனிம வளம், மனிதர் வாழ ஏற்ற சூழ்நிலை உள்ளதா என்பது குறித்து ஆராயும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதற்காகச் சிறப்பாக, ஐந்து நவீன கருவிகள் "மங்கள்யான்' செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டு உள்ளன. இவற்றின் எடை 15 கிலோ.
மேலும், செவ்வாய்க் கிரகத்தின் மேல் பகுதியில் மீத்தேன் வாயு இருக்கிறதா என்பதை இதில் பொருத்தப்பட்டுள்ள கருவி தெரிவிக்கும். உலக அளவில் இது மிக முக்கிய சோதனையாகும்.
செவ்வாய்க் கிரகத்திற்கு விண்கலம் அனுப்புவதில் இந்தியா வெற்றி பெற்று உலக சாதனைப் பட்டியலில் இந்தியா 4வது நாடு என்ற இடத்தை பிடித்துள்ளது. இது வரை இரஷ்யா, அமெரிக்க ஐக்கிய நாடு, ஐரோப்பிய விண்வெளி கழகம் ஆகியன வெற்றிகரமாக செவ்வாய்க் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பியுள்ளது. இந்நாடுகள் மொத்தம் அனுப்பிய 51 விண்கலத்தில் 21 மட்டுமே வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : தினமலர்







All the contents on this site are copyrighted ©.