2013-11-04 14:17:15

வாரம் ஓர் அலசல் – போர்களும் சுற்றுச் சூழலும்


நவ.04,2013. RealAudioMP3 வழிபோக்கர் ஒருவர் கோடையின் வெயிலைத் தாங்க முடியாமல் சற்றுத் தொலைவிலிருந்த மரத்தை நோக்கி ஓடி அதன் நிழலில் அமர்ந்தார். களைப்பு சற்று நீங்கியதாகப் பெருமூச்சு விட்டார். சிறிது நேரத்தில் இளைஞர் ஒருவர் கோடரியுடன் அந்த மரத்தை நோக்கி வருவதைப் பார்த்தார் வழிபோக்கர். கூரிய கோடரியுடன் வந்த இளைஞரைப் பார்த்து, என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டார் அவர். அதற்கு அந்த இளைஞர், எனது தாத்தா ஆசையோடு வளர்த்த மரம் இது. அவர் இறந்துவிட்டார். எனக்கு இப்போது பணம் தேவைப்படுகின்றது. இந்த மரத்தை வெட்டி விறகுகளாக்கி அவற்றை விற்று பிழைக்கப் போகிறேன் என்று சொன்னார். சரி, உனது தாத்தா உயிர் பிரியும் நேரத்தில் இப்படிச் செய்யச் சொன்னாரா என்று கேட்டதற்கு, இல்லை, ஆனால் அவர் வேறொன்று சொன்னார், அதாவது பாதையோரத்தில், தான் நட்டு வளர்த்த மரங்களைப்போன்று நானும் ஏராளமான மரங்களை நட வேண்டும், அதன்மூலம் மக்கள் பயன் அடைய வேண்டும், எனது ஆசையை நிறைவேற்றி வைத்திடு என்று கூறியபடி உயிர்விட்டார் என்று சொன்னார் இளைஞர். ஓ அப்படியா, நீ இப்போது செய்யப்போகும் செயல் உனது தாத்தாவின் கடைசி ஆசைக்கு முரணாக இருக்கின்றதே என வழிபோக்கர் கேட்க, எனக்கு அதைப்பற்றியெல்லாம் கவலையில்லை, எனக்குத் தேவை பணம் என்றார் இளைஞர். சரி, நீ மரத்தை வெட்டுவதும் வெட்டாமல் இருப்பதும் உனது விருப்பம். உனது விருப்பத்தில் நான் தலையிடமாட்டேன். ஆனால், நீ இதனைச் செய்யும் முன் நான் சொல்வதைச் செய்தால் உனக்கு 100 ரூபாய் தருகிறேன் என்றார் வழிபோக்கர். ஐயா, எனக்குப் பணம்தான் வேண்டும், நீங்கள் பணம் கொடுத்தால் எந்த வேலையையும் செய்து முடிப்பேன் என இளைஞர் சொல்ல, சரி, நீ இந்த மரத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்துசென்று மீண்டும் இந்த மரத்தடிக்கே வந்துவிட வேண்டும், உனது கோடரியை இங்கேயே விட்டுச்செல் என்றார் வழிபோக்கர். இளைஞரும் அப்படியே நடந்து அந்த மரத்தடிக்கு வந்தபோது வியர்வையால் நனைந்திருந்தார். அப்பப்பா... என்ன வெயில்... என்ன வெயில்... இந்த மரத்தடிக்கு வந்தபின்னர்தான் உயிரே வந்ததாக உணர்கிறேன். இந்த மர நிழலின் அருமை இப்போதுதான் எனக்குப் புரிகின்றது. எனது வீட்டின் அருகிலேயே இது இருப்பதால் இதன் நிழலின் அருமையை உணராமல் இருந்துவிட்டேன். எனது தாத்தாவும் இந்த மரத்தைச் சரியாகத்தான் நட்டு வைத்துள்ளார். நான் இனி இந்தக் கோடரியைத் தொடவே மாட்டேன் என்றார் இளைஞர். பின்னர் வழிபோக்கர் ஏற்கனவே சொன்னபடி பணத்தைக் கொடுத்தார். இளைஞர் அதை வாங்க மறுத்துவிட்டார். நான் பிழைக்க வேறு வழியைத் தேடிக் கொள்கிறேன், எனது தாத்தாவின் கட்டளையையும் எப்படியாவது செய்துவிடுவேன் என்று உறுதிபடச் சொன்னார் இளைஞர்.
வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பார்கள். மரங்கள் வெட்டப்படுவதாலும், காடுகள் அழிக்கப்படுவதாலும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் சொல்லும்தரமன்று. போர்களில் எதிரிப்படைகளுக்கு வள ஆதாரங்கள் பயன்படாமல் இருப்பதற்காகவும் காடுகள் அழிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, 1975ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி முடிவடைந்த, 20 ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெற்ற வியட்நாம் போரின்போது, அமெரிக்க ஐக்கிய நாட்டு இராணுவம், வியட்நாமில் Agent Orange அல்லது Herbicide Orange(HO) என்ற நஞ்சுகலந்த தாவரக் கொல்லிகளைத் தெளித்தது காடுகள் அழிவுக்கு ஓர் எடுத்துக்காட்டு. இந்த வியட்நாம் போரில் அமெரிக்க இராணுவம் ஏறக்குறைய இரண்டு கோடி காலன்கள் நச்சுத் தாவரக் கொல்லிகளை, 45 இலட்சம் ஏக்கர் நிலத்தில் விதைத்துள்ளது. இதனால், 4 இலட்சம் பேர் கொல்லப்பட்டனர் மற்றும் உடல் ஊனமடைந்தனர். மேலும், 5 இலட்சம் சிறார் உடல் உறுப்புக்கள் குறைபாடுகளுடன் பிறந்தனர் என புள்ளி விபரங்கள் கூறுகின்றன. ஆயினும், இந்தத் தாவரக் கொல்லிகளால் பத்து இலட்சம் பேர்வரை உடல் ஊனத்தையும், நலவாழ்வுப் பிரச்சனைகளையும் எதிர்கொண்டனர் என வியட்நாம் செஞ்சிலுவை சங்கம் கணக்கிட்டுள்ளது. அப்போரின்போது வியட்நாம், லாவோசின் கிழக்குப்பகுதி மற்றும் கம்போடியாவின் சில பகுதிகளில், ஆரஞ்சு நிறத்தாலான நச்சுத் தன்மைமிக்க வேதியப் பொருள்கள் கலந்த தாவரக் கொல்லிகள் தெளிக்கப்பட்டன எனச் சொல்லப்படுகின்றது.
2003ம் ஆண்டு ஈராக்கில் 21 நாள்கள் நடைபெற்ற நேசநாடுகளின் ஆக்ரமிப்புப் போரில் பெரும்பாலும் வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அச்சண்டையின்போது மூன்று வாரங்களில் மட்டும் ஏறக்குறைய ஆயிரம் டன்களுக்கு அதிகமான யுரேனிய ஆயுதத் தளவாடங்கள் பெரும்பாலும் நகரங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால் எவ்விதப் புற்றுநோயும் தாக்கவில்லை என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் கூறினாலும், அதே அமெரிக்காவின் ஆய்வுக்குழு ஒன்று, அதன் எதிர் விளைவுகள் புற்றுநோய்க்குக் காரணமாகியிருப்பதாகத் தெரிவித்துள்ளது. ஈராக்கில் பிறக்கும் பெரும்பான்மையான குழந்தைகளுக்கு உடல் உறுப்புகளில் குறை காணப்படுகிறதாம். வளர்ந்து வரும் பல குழந்தைகளுக்கு இரத்த புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்ப் பாதிப்புகள் இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. வெடிகுண்டுகள் வீச்சின்போது, மண்ணில் கலந்த யுரேனியம் கதிர் வீச்சுகளால்தான் இதுபோன்ற புற்றுநோய்களும், உடல் உறுப்பு பாதித்த குழந்தைகளின் பிறப்பு விகிதமும் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளதாம். ஈராக்கில் 1990ம் ஆண்டு நடந்த வளைகுடா போருக்குப் பின்னர் அங்கு பிறந்த 1 லட்சம் குழந்தைகளில் 4 பேர் மட்டுமே இதுபோன்ற நோய்களால் பாதிக்கப்பட்டனர். ஆனால் 2003ம் ஆண்டின் போருக்கு பின்னர் இதுபோன்ற நோய்த் தாக்குதல் விகிதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எதிரிகளின் வளங்களை அழிக்கும் போர் யுக்திகள் பழங்காலத்திலே இருந்து வந்துள்ளன. உரோமையர்களும், அசீரியர்களும் எதிரிகளின் விவசாய நிலங்களில் உப்பை விதைத்துள்ளனர். போரை பற்றிய விதிமுறைகளை விளக்கும் இணைச்சட்ட நூல் பிரிவு 20, வசனம் 19ல், ஒரு நகருக்கு எதிராகப் போர் தொடுத்து நீ அதை நெடுநாள் முற்றுகையிட்டுக் கைப்பற்றினால் அதிலுள்ள மரங்களைக் கோடரியால் வெட்டி வீழ்த்தாதே. வயல்வெளி மரங்கள் உன்னை முற்றுகையிட வரும் மனிதர் அல்லவே எனச் சொல்லப்பட்டுள்ளது. இந்நவீன காலத்தில் போர்களின்போது பயன்படுத்தப்படும் வேதிய, உயிரிய மற்றும் அணு ஆயுதங்கள் சுற்றுச்சூழலுக்குக் கடும் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன. அணு குண்டுகளால் கடும் விளைவுகளை எதிர்நோக்கிய ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் பற்றி நாம் சொல்லத் தேவையில்லை. 1986ம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் இரஷ்யாவில் முறையே ஏறத்தாழ 36,000 மற்றும் 34,000 அணுகுண்டுகள் இருந்தன என்கின்றன அதிகாரப்பூர்வத் தகவல்கள். மொத்தத்தில் இவ்விரண்டு நாடுகளிடம் மட்டுமே ஏறத்தாழ 70,000 அணுகுண்டுகள் இருந்திருக்கின்றன. 1980களில் அமெரிக்க-இரஷ்ய பனிப்போர் உச்சத்தை அடைந்திருந்தபோது, சுற்றுச்சூழல் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் மூன்று தனித்தனி குழுக்கள், அப்போதைய அமெரிக்க அரசுத்தலைவர் ரொனால்ட் ரீகன் மற்றும் இரஷ்ய அதிபர் கோர்பர்சேவிற்கும் ஓர் எச்சரிக்கை விடுத்தன. அணுஆயுதங்களிலிருந்து வெளிப்படும் கடும் வெப்பம், கதிரியக்கம் ஆகிய நேரடித் தாக்கங்களை மட்டுமல்லாமல், ஓர் அணுஆயுதத்திலிருந்து வெளிப்படும் கரும்புகை மற்றும் அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாற்றங்கள், மனிதகுலத்திற்கே அழிவை ஏற்படுத்தும் அளவிற்கு ஆபத்தானவை என வலியுறுத்தின. அவ்வாய்வறிக்கை அணுஆயுதங்களினால் ஏற்படும் நேரடி பாதிப்புகளால், வானிலையில் ஏற்படும் உடனடி மாற்றங்கள் குறித்த ஆபத்துக்களை முன்வைத்தது. அதாவது, திடீரென வருடம் முழுவதும் குளிர்காலமாகிவிடும் என்றும், அதனை "அணுக்கருக் குளிர்காலம்" என்றும் அக்குழுக்கள் கூறின.
தீபாவளி போன்ற விழாக்காலங்களில் வெடிக்கப்படும் நச்சுப்பொருள்கள் கலந்த பட்டாசு வெடிகள் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் ஆபத்து எல்லாருக்கும் தெரிந்ததே. ஓர் அணுகுண்டு வெடித்தபின் பலநாட்கள் வரை நீடிக்கப்போகும் அனல்காற்று, அது வெடித்த நகரத்திலிருந்த எரிபொருட்கள், கட்டுமானப் பொருட்கள் என அனைத்தும் எரிந்து சாம்பலாவதால் வெளியாகும் கார்பன் துகள்கள், ஓசோன் வாயுப் படலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பல்வேறு கரிம மூலக்கூறுகள் என அனைத்தையும் குறித்து நாம் சிந்திக்க வேண்டும். அண்மைக் காலமாக, சில நாடுகள் அணுப் பரிசோதனைகளை நடத்தி வருகின்றன. அவை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகவும் பெருமைப்பட்டுக் கொள்கின்றன. இந்தியாவில் 1998ம் ஆண்டில் நடத்தப்பட்ட சோதனைக்குப்பின் போக்ரானிலிருந்து 5 கி.மீ தொலைவில் இருக்கும் ஒரு கிராமத்துப் பெரியவர் ஒரு நேர்காணலில் ஒரு கேள்வியை முன்வைத்துள்ளார்.
"பூமிக்கடியில் ஒரு சூரியன் புதைக்கப்பட்டது என்று நீங்கள் பெருமைப்படுகிறீர்கள், அப்படியானால், அப்பகுதியில் வலைகளில் வாழ்ந்த முயல்கள், கீரிகள், பாம்புகள் மற்றும் அங்கிருந்த சிறிய உயிர்களெல்லாம் எப்படி இதைத் தாங்கிக்கொள்ளும்?"
மனித சமுதாயம் சிந்திக்க வேண்டிய கேள்வி இது. போர்களில் ஈடுபடும் போர்க்கப்பல்கள் படைவீரர்களை மட்டும் சுமந்து வருவதில்லை, அந்தந்தப் பகுதியிலுள்ள அரியவகை உயிரினங்களையும் அழித்து விடுகின்றன. எடுத்துக்காட்டாக, பசிபிக் பெருங்கடலிலுள்ள Laysan தீவில் அரியவகை உயிரினங்கள் அழிந்து விட்டதாகச் சொல்லப்படுகின்றது. எனவே இவற்றையெல்லாம் கருத்தில் கொண்ட ஐக்கிய நாடுகள் நிறுவனம், 2001ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி ஐ.நா.பொது அவையில், போர்களிலும் ஆயுதம் தாங்கிய மோதல்களிலும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதைத் தடைசெய்யும் அனைத்துலக நாளை உருவாக்கியது. அதன்படி ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 6ம் தேதியன்று இந்நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. போர்களினால் கிணறுகளும், விளைநிலங்களும் ஆறுகளும் மாசடைகின்றன, காடுகள் எரிக்கப்படுகின்றன. உலகில் கடந்த 60க்கும் மேற்பட்ட ஆண்டுகளில் இடம்பெற்றுள்ள உள்நாட்டுச் சண்டைகளில் குறைந்தது 40 விழுக்காடு, இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதோடு தொடர்புடையது. அதாவது மரங்கள், வைரங்கள், தங்கம், எண்ணெய்ச் சுரங்கங்கள், வளமான நிலங்கள், தண்ணீர் போன்ற உயர் மதிப்புடைய இயற்கை வளங்களோடு தொடர்புடையன. எனவே உலகின் அமைதிக்கும் நிலையான தன்மைக்கும் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டியது இன்றியமையாதது என்று ஐ.நா. வலியுறுத்தி வருகிறது.
அன்பர்களே, வளமையான மற்றும் பாதுகாப்பான ஓர் எதிர்காலத்தை வருங்காலத் தலைமுறைகளுக்கு நாம் விட்டுச்செல்ல வேண்டும். அது நம் ஒவ்வொருவர் கையில்தான் இருக்கின்றது. எனவே இயற்கையைப் போற்றி சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம். நாம் இருக்குமிடங்களை வாழ்வதற்கு ஏற்ற இடங்களாக அமைப்போம்.
அறிவியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னார் - இப்பூமி மிகவும் அழகான மற்றும் இரம்யமானதோர் அமைதிப் பூங்காவாக மாறிவிடும், மனிதர் மட்டும் இல்லாவிட்டால் என்று.








All the contents on this site are copyrighted ©.