2013-11-04 15:08:33

சவுதியில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்களைத் திரும்பி அழைப்பதற்கு இலங்கை அரசு முயற்சி


நவ.04,2013. சட்டவிரோதமாக சவுதி அரேபியாவில் தங்கியிருக்கும் மக்களை அந்நாட்டில் இருந்து வெளியேற வழங்கப்பட்டிருந்த பொதுமன்னிப்பு காலம் முடிவடைந்த நிலையில், இந்தப் பொதுமன்னிப்புக் காலத்தில் சவுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த ஏறக்குறைய 10 ஆயிரம் இலங்கையர்கள் நாடு திரும்பியதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்தது.
ஏற்கனவே ஏறக்குறைய 16,000 இலங்கையர்கள் சவுதி அரேபியாவில் சட்ட விரோதமாக தங்கிருப்பதாக அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத் தகவல்கள் கூறும்வேளை, இன்னுமிருக்கின்ற 4,000 பேரை இலங்கைக்கு அழைத்துவர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக அப்பணியகம் மேலும் தெரிவித்தது.
சவுதியில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் இலங்கையைச் சேர்ந்த 16 ஆயிரம் பேர் இந்தக் காலப் பகுதியில் அங்கு இலங்கை தூதரகத்தில் தங்களைப் பதிவுசெய்து கொண்டுள்ளனர்.
கடந்த மே மாதம் 4ம் தேதி முதல் இம்மாதம் 3ம் தேதிவரை இந்தப் பொது மன்னிப்புக் காலம் அந்நாட்டு அரசினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
பொது மன்னிப்பு வழங்கப்பட்ட காலத்துக்குள் அதனைப் பெற தகுதியுடைய ஏறக்குறைய 10,000 பேரும் நாட்டிற்கு அழைக்கப்பட்டு விட்டதாகக் கூறிய இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு வாரியத்தின் மங்கள ரன்தெனிய, பெண்கள் உட்பட இன்னும் 6,000 பேரைப் பொருத்தவரையில் சட்ட விரோதமாக தங்கியிருந்தாலும் சவுதி அரேபிய அரசின் பொது மன்னிப்பு வரையறைக்குள் அவர்கள் உட்படாதவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது விசா இன்றி தங்கியிருந்தமை, கைவிரல் அடையாளங்கள் பதிவு செய்யாமை போன்ற அந்நாட்டு சட்ட திட்டங்களை இவர்கள் மீறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது சட்டவிரோதமாகத் தங்கியிருப்பவர்களுக்கு 2 வருடச் சிறைத்தண்டனை அல்லது ஏறக்குறைய 10,000 சவுதி ரியால் தண்டனைப் பணமாக செலுத்த நேரிடும் என அந்நாட்டு சட்டம் கூறுகின்றது.

ஆதாரம் : ColomboPage








All the contents on this site are copyrighted ©.