2013-11-04 15:07:53

கல்வி மற்றும் உணவுப் பற்றாக்குறை குறித்து கர்தினால் டர்க்சன்


நவ.04,2013. கல்வி மற்றும் உணவுப் பற்றாக்குறை இன்றையக் குழந்தைகளில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்து திருப்பீடத்தின் அறிவியல் கழகம் இத்திங்கள் முதல் புதன் வரை ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் உரையாற்றினார் கர்தினால் பீட்டர் டர்க்சன்.
திருப்பீடத்தின் நீதி மற்றும் அமைதி அவையின் தலைவரான கர்தினால் டர்க்சன், திருப்பீட அறிவியல் கழகத்தின் கூட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றுகையில், பசியும் ஏழ்மையும் கல்வியோடு மிக நெருங்கியத் தொடர்புடையவைகளாக இருப்பதை மனதில்கொண்டு, இன்றைய உலகில் பல இலட்சக்கணக்கான சிறார்கள் போதிய உணவின்றியும் கல்வி வசதியின்றியும் துன்புறுவது குறித்து நாம் எண்ணிப் பார்க்கவேண்டும் என்றார்.
'ரொட்டியும் மூளையும், கல்வியும் ஏழ்மையும்’ என்ற தலைப்பில் திருப்பீட அறிவியல் கழகம் ஏற்பாடு செய்துள்ள இந்த மூன்று நாள் கருத்தரங்கு, சத்துணவிற்கும் மூளை வளர்ச்சிக்கும் உள்ள தொடர்பைச் சுட்டிக்காட்டி நிற்கிறது எனவும் கூறியகர்தினால் டர்க்சன், மூளையின் உதவி கொண்டு கண்டுபிடிக்கப்படும் அறிவியல் முன்னேற்றங்கள், ஏழ்மையை விரட்ட உதவுவதாக இருக்கவேண்டும் எனவும் எடுத்துரைத்தார்.
மக்களிடையேயானசகோதரத்துவஒருமைப்பாட்டின் மூலம் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணமுடியும் என்பதையும் வலியுறுத்திக் கூறினார் திருப்பீடத்தின் நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் கர்தினால் டர்க்சன்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.