2013-11-04 15:07:00

இறந்த கர்தினால்கள், ஆயர்களுக்காக திருத்தந்தை செபம்


நவ.04,2013. நல்ல, அதேவேளை நம்பிக்கையுள்ள ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வெகுமதியை இறைவன், கடந்த 12 மாதகாலத்தில் திருஅவையில் உயிரிழந்த கர்தினால்கள் மற்றும் ஆயர்களுக்கு வழங்கவேண்டும் என செபிப்போம் என இத்திங்கள் காலை தூய பேதுரு பேராலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
"சாவோ, வாழ்வோ, வானதூதரோ, ஆட்சியாளரோ, நிகழ்வனவோ, வருவனவோ, வலிமை மிக்கவையோ, உன்னதத்தில் உள்ளவையோ, ஆழத்தில் உள்ளவையோ, வேறெந்தப் படைப்பும் நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் வழியாய் அருளப்பட்ட கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது என்பது என் உறுதியான நம்பிக்கை" என தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகம் 8ம் அதிகாரத்தில் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டி உரை நிகழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ், இறை அன்பே கிறிஸ்தவர்களின் நம்பிக்கை மற்றும் ஆழமான நோக்கம் எனவும் எடுத்துரைத்தார்.
ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் இறுதி வாரம் முதல் 12 மாதங்களில் உயிரிழந்த திருஅவைத் தலைவர்களுக்காக நவம்பர் முதல் வாரத்தில் தூய பேதுரு பசிலிக்காவில் திருத்தந்தையர்கள் திருப்பலி நிறைவேற்றும் பழக்கத்தையொட்டி, இத்திங்களன்று அவ்வான்மாக்களின் இளைப்பாற்றிக்காகத் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், இறைவனுக்கும் மனிதருக்கும் இடையேயான அன்புப்பிணைப்பை பாவம் ஒன்றே முறிக்க முடியும் எனினும், இறைவன் அப்பிணைப்பை மீண்டும் உருவாக்க மனிதரின் மரணத்திற்குப் பின்னரும் அவரைப் பின்தொடர்ந்துகொண்டேயிருக்கிறார் என்றார்.
நம்மால் அன்புகூரப்பட்டவர்கள் அல்லது நமக்கு மிக நன்றாகத் தெரிந்தவ்ர்கள் உயிரிழக்கும்போது ' இவர்களின் வாழ்வும் இவர்களின் பணியும் இவர்கள் திருஅவைக்கு ஆற்றிவந்துள்ள சேவையும் என்னவாகும் என்ற கேள்வி நமக்குள் எழும்புவது இயல்பே என்ற திருத்தந்தை, உயிரிழந்தவர்கள் அனைவரும் இறைவனின் கைகளில் தங்கள் அடைக்கலத்தைப் பெற்றுள்ளனர் என்றார் அவர். இறைவன் தம் காயமுற்ற கைகளால் நமக்கு ஆறுதலையும் கருணையையும் வழங்குகிறார் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். முடிவற்ற வாழ்வுக்கான உயிர்ப்பின் மீதான நம் நம்பிக்கை குறித்தும் தன் மறையுரையில் எடுத்தியம்பிய திருத்தந்தை, கடந்த 12 மாத காலத்தில் உயிரிழந்த கர்தினால்கள் மற்றும் ஆயர்களுக்காகச் செபிக்க வேண்டிய நம் கடமையையும் சுட்டிக்காட்டினார்.


ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.