2013-11-02 14:58:24

நவம்பர் 03, பொதுக்காலம் - 31ம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 நம்பிக்கை ஆண்டின் இறுதியை நெருங்கிவந்துள்ளோம். இந்த நம்பிக்கை ஆண்டில் 'கருணையின் நற்செய்தி' என்று அழைக்கப்படும் லூக்கா நற்செய்தி நம் ஞாயிறு வழிபாடுகளில் தொடர்ந்து ஒலித்தது. நற்செய்தியாளர் லூக்கா ஓர் ஓவியர் என்பது மரபு. ஓவியருக்கே உரிய மென்மையான மனம்கொண்டு அவர் இயேசுவின் வாழ்வில் மனிதத்தன்மை வெளிப்பட்ட மென்மையான நேரங்களை அழகுறத் தீட்டியுள்ளார். இந்த நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ள ஒரு சில பகுதிகள் நம் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளன. மரியாவின் புகழ் பாடல், இயேசு தன் பணியின் உட்கருத்தை நாசரேத்து தொழுகைக் கூடத்தில் அறிவித்த பகுதி, நல்ல சமாரியன் உவமை, காணாமற்போன மகன் உவமை என்ற அற்புதமான பகுதிகள் வேறு எந்த நற்செய்தியிலும் காணக் கிடைக்காத பகுதிகள்.
நம்பிக்கை ஆண்டில் கருணையின் நற்செய்தியைக் கேட்கும் வாய்ப்பு நமக்குக் கிடைத்தது, இறைவன் தந்த ஒரு கொடை என்றே சொல்லவேண்டும். கருணை பெருகும் இடத்தில், நம்பிக்கை வளரும் என்பதை நாம் அறிவோம். கருணையும், நம்பிக்கையும் ஒன்றை ஒன்று சந்தித்து, தழுவிக்கொள்ளும் ஒரு நிகழ்வு, இன்று நமக்கு நற்செய்தியாகத் தரப்பட்டுள்ளது. இயேசு சக்கேயுவைச் சந்தித்த இந்த நிகழ்வு, வேறு எந்த நற்செய்தியிலும் தீட்டப்படாத அழகு ஓவியம். லூக்கா நற்செய்தி 19ம் பிரிவின் துவக்கத்தில் காணப்படும் அந்த 10 இறை வசனங்கள் எத்தனை முறை வாசித்தாலும் புதுமையான அனுபவம்தான்.
‘இயேசு எரிகோ நகரில் நடந்து போய்க்கொண்டிருந்தார்’ என்று இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. இந்த நிகழ்வை ஒரு கற்பனைக் காட்சியாக உங்கள் முன் படைக்க நான் விரும்புகிறேன். இயேசு எரிகோ நகரில் நடந்து போய்க்கொண்டிருந்தார். அவரது புகழ் பரவி வந்ததால், அவரைச்சுற்றி, கூட்டம் வழக்கம்போல் அலைமோதியது. இந்தக் கூட்டத்தைப் பல்வேறு வழிகளில் சமாளித்து, இயேசுவிடம் புதுமைகள் பெற்றவர்கள் உண்டு. கூட்டத்தில் துணிந்து புகுந்து இயேசுவின் ஆடையைத் தொட்ட பெண், கூரையைப் பிரித்து இறக்கப்பட்ட முடக்குவாத நோயாளி, தூரத்தில் இருந்து கத்தி இயேசுவின் கருணைப் பார்வையைப் பெற்ற பார்வைத்திறன் அற்றவர்... இப்படி பலர் இயேசுவைச் சுற்றியிருந்த கூட்டத்தைப் பல வழிகளில் சமாளித்தனர். இயேசுவிடம் சென்றால் புதுமை நடக்கும் என்ற எதிபார்ப்புடன் இவர்கள் அவரை அணுகியவர்கள். இன்று நாம் சந்திக்கும் சக்கேயு, எந்தப் புதுமையையும் எதிர்பார்க்காமல் இயேசுவிடம் வந்தவர். ஏதோ ஓர் இனம்புரியாத ஆர்வம், அவரை அந்தக் கூட்டத்திற்கு இழுத்து வந்தது. கூட்டத்தைச் சமாளிக்க சக்கேயு வேறொரு வழியைத் தேடுகிறார்.
சக்கேயுவை முதலில் அறிமுகப்படுத்துகிறேன்.
அவர் செல்வந்தர், வரி வசூலிப்பவர்களின் தலைவர், குள்ளமான மனிதர்... நான் சக்கேயுவை அவர், இவர் என்று அழைப்பதை இஸ்ரயேல் மக்கள் கொஞ்சமும் விரும்ப மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை, சக்கேயு அவர் அல்ல, அவன். அவன் ஒரு பாவி, துரோகி.
வாழ்வது தங்கள் சொந்த நாடானாலும், இஸ்ரயேல் மக்கள், உரோமையர்களுக்குத் தொடர்ந்து வரி செலுத்தவேண்டிய கட்டாயம். சொந்த நாட்டிலேயே அந்நியனுக்கு வரி செலுத்தி வந்ததால் உரோமையர் மீது ஆழ்ந்த வெறுப்பு கொண்டிருந்தனர். அதைவிட, உரோமையருக்கு வரி வசூல் செய்து கொடுத்த யூதர்களைக் கண்டு மிக அதிக வெறுப்பு. அவர்களை அவலச் சொற்களால் தினமும் அர்ச்சித்தனர். பாவிகள், துரோகிகள், புல்லுருவிகள், நாசக்காரர்கள், ப்ரூட்டஸ்கள் என்ற பல பழிச்சொற்களைத் தாங்கி வாழ்ந்தவர்கள்.
இத்தகைய பழிச்சொற்களுக்கு உள்ளான வரிவசூலிக்கும் குடும்பத்தில் சக்கேயு பிறந்திருக்க வேண்டும். இந்தத் தொழிலை அவர் தானாகவே தேர்ந்தெடுத்திருக்கலாம் அல்லவா? என்னைப் பொறுத்தவரை, சக்கேயு இந்தக் குடும்பத்தில் பிறந்தவர். ஏன் அப்படிக் கூறுகிறேன்? காரணம்...சக்கேயு குள்ளமாய் இருந்தார். வரி வசூலிப்பவர் குடும்பத்தில் பிறப்பதற்கும், குள்ளமாய் இருப்பதற்கும் என்ன தொடர்பு? சக்கேயு பிறந்தது முதல் மற்றவர்களின் வெறுப்புக்கும், கேலிக்கும் ஆளானவர். அதனால், அவரால் வளர முடியவில்லை. சமுதாயம் அவரைப் பாவி என்றும், துரோகி என்றும் குட்டிக்கொண்டே இருந்ததால், குனிந்து போனார், குள்ளமாய்ப் போனார்.
“இயேசு யார் என்று பார்க்க சக்கேயு விரும்பினார்” என்று நற்செய்தி கூறுகிறது. இது வெறும் ஆர்வக் கோளாறு... ஒரு பார்வையாளரின் மன நிலை. சக்கேயு வாழ்ந்த மாடி வீட்டு பக்கம் இயேசு வந்திருந்தால், மாடியில் நாற்காலி போட்டு, அதில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து, இயேசு தன் வீட்டைக் கடந்து போவதைப் பார்த்திருக்கலாம். மாடியிலிருந்து பார்த்திருந்தால், இயேசுவும், அந்தக் கூட்டமும் குள்ளமாகத் தெரிந்திருக்கும். ஊர் மக்களைக் குள்ளமாய் பார்ப்பதில் சக்கேயுவுக்கு ஒரு தனி திருப்தி இருந்திருக்கும். ஆனால், அதற்கு வழி இல்லை. இயேசு சுற்றி வந்த வீதிகள் எல்லாம் ஏழைகள் வாழும் பகுதிளாக இருந்தன. தன் வீட்டுப் பக்கம் இயேசு வரமாட்டார் என்று தீர்மானித்த சக்கேயு, தன்னுடை தன்மானத்தை, தற்பெருமையைக் கொஞ்சம் ஓரம் கட்டிவிட்டு, இயேசுவைத் தேடி வருகிறார். வெறும் ஆர்வம்தான் அவரை இயேசுவிடம் கொண்டுவந்தது என்றாலும், மீட்பின் முதல் படிகளில் சக்கேயு ஏற ஆரம்பித்துவிட்டார். தற்பெருமைக்கு மூட்டை கட்டிவிட்டு, ஒரு மரமேறி அமர்ந்தார். இது சக்கேயுவின் பயணம்.
இனி இயேசுவின் பயணம்.
எரிகோ வீதிகளில் இயேசு நடந்து வரும்போது, நிமிர்ந்து பார்க்கிறார். தூரத்தில், ஒரு மரத்தின் மீது நடுத்தர வயதுள்ள ஒருவர் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறார். இயேசுவுக்கு வியப்பு. சிறுவர்கள் மரமேறி அமர்வது சாதாரண விஷயம். இந்த ஆள், ஏறக்குறைய, 30 அல்லது 40 வயதானவர்... இவர் ஏன் மரமேறியிருக்கிறார்? ஒருவேளை மனநிலை சரியில்லாதவரோ? அப்படியும் தெரியவில்லை. அவர் உடையைப் பார்த்தால், நல்ல வசதி படைத்தவர்போல் தெரிகிறது. பின் ஏன் மரமேறியிருக்கிறார்? இயேசுவுக்கு அவரைப்பற்றி அறிய ஆர்வம். அருகில் இருந்தவர்களிடம் கேட்கிறார், அவர் யார் என்று. கூட்டத்தில் ஒரு சிலர் இயேசு காட்டிய மனிதரைப் பார்க்கின்றனர். கோபம், வெறுப்பு, கேலி அவர்கள் பதிலில் தொனிக்கின்றன. "ஓ, அவனா? அவன் ஒரு பாவி... துரோகி." அவரைப் பற்றியக் குற்றப் பட்டியல்தான் அவர்களிடம் எப்போதும் கைவசம் இருந்ததே. இயேசு அந்தப் பட்டியலை ஒதுக்கிவிட்டு, அவர் பெயரைக் கேட்கிறார். யாருக்கும் அவர் பெயர் தெரியவில்லை. பாவி, துரோகி என்று அடைமொழிகளாலேயே அவரை இதுவரை அழைத்துவந்ததால், அவருடையப் பெயர் யாருக்கும் நினைவில் இல்லை. இயேசு விடுவதாக இல்லை. மீண்டும், மீண்டும் பெயரைக் கேட்கிறார். தங்கள் ஞாபகச் சக்தியைக் கசக்கிப் பிழிந்து, இறுதியாக, "சக்கேயு" என்று சொல்கின்றனர். இயேசு அந்த மரத்திற்குக் கீழ் வந்தவுடன், மேலே பார்த்து, அவரிடம், "சக்கேயு, விரைவாய் இறங்கி வாரும். இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்" என்றார்.
புதுமை ஆரம்பமானது. மக்கள் தன்னை வெறுப்போடு அழைத்த அடைமொழிகளைக் கேட்டுக் கேட்டு, தன் பெயரைத் தானே மறந்து போயிருந்த சக்கேயுவுக்கு முதலில் ஒன்றும் விளங்கவில்லை. இன்னொரு யூதர் தன்னைப் பெயர் சொல்லி அழைத்ததும், சக்கேயுவின் மனதை வெறுப்பிலும், கசப்பிலும் புதைத்திருந்த சிறைகள் திறந்தன. சங்கிலிகள் அறுந்தன.
மற்றவர்களுடையப் பெயர்களைக் கற்றுக்கொண்டு, அவர்களைப் பெயர் சொல்லி அழைக்கும்போது, உறவுகள் பலப்படுவதையும், உறவுகள் ஆழப்படுவதையும் நாம் உணர்ந்திருக்கிறோம். முன் பின் தெரியாத ஒருவர், அதுவும் தான் பிறந்த நேரம் முதல் தன்னைப் பழிச்சொற்களால் வதைத்து வந்த தன் யூத குலத்தைச் சார்ந்த ஒருவர், தன்னைப் பெயர் சொல்லி அழைத்ததும், சக்கேயு மாற்றம் அடைந்தார். உடல் மாறியதா? தெரியவில்லை. மனம் வெகுவாக மாறியது. இந்த மனமாற்றத்தைப் பற்றி சிறிது சிந்திப்போம்.
அன்பர்களே, விவிலியம், கிறிஸ்தவ பாரம்பரியம் இவற்றில் மனம் மாறியவர்களைப் பற்றி பல கருத்துக்கள் கேட்டிருக்கிறோம். சக்கேயுவின் மனமாற்றத்தில் ஒரு தனி சிறப்பு உண்டு. "ஆண்டவரே, இனி நான் நல்லவனாக இருப்பேன். யாரையும் ஏமாற்ற மாட்டேன். தான தர்மம் செய்வேன்." என்று பொதுவாகச் சொல்லியிருக்கலாம் சக்கேயு. அதையும் மனமாற்றம் என்று சொல்லியிருப்போம். ஆனால், சக்கேயுவின் கூற்று இவற்றை விட, மிகத் தெளிவாக இருந்தது. "ஆண்டவரே, என் உடமைகளில் பாதியை நான் எழைகளுக்குக் கொடுத்து விடுகிறேன். யாரையாவது ஏமாற்றி, எதையாவது பறித்திருந்தால், நான்கு மடங்காகத் திருப்பி கொடுத்து விடுகிறேன்." லூக்கா 19: 8
பாதி சொத்து ஏழைகளுக்கு... ஏமாற்றியதற்கு நான்கு மடங்கு பரிகாரம்.
இந்த சொற்களைச் சக்கேயு விருந்தின்போது 'எழுந்து நின்று' சொன்னதாக நற்செய்தி சொல்கிறது. இயேசுவிடம் தனிப்பட்ட விதத்தில் முணுமுணுக்கப்பட்ட வார்த்தைகள் அல்ல... ஏறக்குறைய, கூரை மீது ஏறி நின்று கொடுக்கப்பட்ட வாக்குறுதி. சக்கேயு இந்த வார்த்தைகளை 'எழுந்து நின்று' சொன்னபோது உடல் அளவில் இன்னும் குள்ளமாய்த் தான் இருந்தார். ஆனால், மனதளவில் உயர்ந்திருந்தார். முற்றிலும் உருமாற்றம் பெற்றார். இயேசு. தன்னுடையப் பெயரைச் சொல்லி இயேசு அழைத்த அந்த பரிவு, அன்பு இந்த மாற்றத்தை உருவாக்கியது. புதுமையொன்று நிகழ்ந்தது. சக்கேயு, இயேசுவின் மனதில் உயர்ந்த ஓர் இடம் பிடித்தார். எனவே தான் இயேசு "இன்று இந்த வீட்டுக்கு மீட்பு உண்டாயிற்று." என்று ஆணித்தரமாகக் கூறினார்.
கடவுள் பாவிகள் மீது கொள்ளும் இரக்கத்தை இன்றைய முதல் வாசகம் அழகாகக் கூறியுள்ளது:
சாலமோனின் ஞானம் 11: 22-12: 2
ஆண்டவரே,... நீர் எல்லாம் வல்லவராய் இருப்பதால் எல்லார் மீதும் இரங்குகின்றீர்: மனிதர்கள் தங்களுடைய பாவங்களை விட்டு மனந்திரும்பும் பொருட்டே நீர் அவற்றைப் பார்த்ததும் பாராமல் இருக்கின்றீர். படைப்புகள் அனைத்தின் மீதும் நீர் அன்புகூர்கிறீர். நீர் படைத்த எதையும் வெறுப்பதில்லை.... ஆண்டவரே, உயிர்கள்மீது அன்புகூர்கின்றவரே, நீர் எல்லாவற்றையும் வாழவிடுகின்றீர்: ஏனெனில் அவை யாவும் உம்முடையன.
உம்முடைய அழியா ஆவி எல்லாவற்றிலும் உள்ளது. ஆகையால் தவறு செய்பவர்களைச் சிறிது சிறிதாய்ச் திருத்துகின்றீர்: அவர்கள் எவற்றால் பாவம் செய்கிறார்களோ அவற்றை நினைவுபடுத்தி அவர்களை எச்சரிக்கின்றீர்: ஆண்டவரே, அவர்கள் தீமையிலிருந்து விடுபடவும் உம்மேல் நம்பிக்கை கொள்ளவுமே இவ்வாறு செய்கின்றீர்.
அனபு, மன்னிப்பு ஆகியவை நிரந்தரமான அழகுள்ளவை. “A thing of beauty is a joy forever.” "அழகானது என்றென்றும் ஆனந்தம் தருவது" என்று கவிஞர் John Keats எழுதினார். வேறொருவர் எழுதியது இது: "கிறிஸ்தவர்கள் அழகை விரும்பவேண்டும். எங்கெங்கு அழகு வெளிப்படையாகத் தெரிகிறதோ, அதை மதிக்க வேண்டும். எங்கெங்கு அழகு மறைக்கப்பட்டுள்ளதோ, அதை வெளிக்கொணர வேண்டும். எங்கெங்கு அழகு அழிக்கப்பட்டுள்ளதோ, அங்கெல்லாம் அதை மீண்டும் உருவாக்க வேண்டும். எங்கெங்கு அழகு இல்லையோ, அங்கெல்லாம் அழகைப் படைக்க வேண்டும்."
இதைத்தான் இயேசு இன்று நற்செய்தியில் செய்திருக்கிறார். "நேர்மையற்ற மனிதராய் சக்கேயு மரம் ஏறினார். புனிதராய் அவரை மரத்தினின்று இறக்கினார் இயேசு."
பாடம் ஒன்றைக் கற்றுக் கொள்ளலாம்: ஒருவரை உண்மையில் மாற்ற வேண்டுமானால், ஒருவரது உண்மை அழகைப் பார்க்க வேண்டுமானால், அவர் மீது நாம் வழக்கமாகச் சுமத்தும் அடைமொழிகளை, கண்டன அட்டைகளை கிழித்தெறிந்துவிட்டு அவரது பெயர் சொல்லி அழைப்போம். அவர் உருமாறும் அழகை, புதுமையைக் காண்போம்







All the contents on this site are copyrighted ©.